ஸ்காட்ஸ் ஸ்குவேரை வாங்கத் திட்டமிடும் தந்தை ராஜ்குமார், மகன் கி‌ஷின்

ஸ்காட்ஸ் ஸ்குவேரை வாங்கத் திட்டமிடும் தந்தை ராஜ்குமார், மகன் கி‌ஷின்

2 mins read
de4bb152-ef80-4b2c-bb62-a851e7197287
ஸ்காட்ஸ் ஸ்குவேர் கடைத்தொகுதியை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. - படம்: பிசினஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உள்ள ஸ்காட்ஸ் ஸ்குவேர் கடைத்தொகுதியைக் கிட்டத்தட்ட $320 மில்லியனுக்கு விற்பனை செய்வதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

ஆர்ச்சர்ட் சாலைக்கு அருகில் உள்ள ஸ்காட்ஸ் சாலையில் அமைந்துள்ள அந்த நான்கு மாடி கடைத்தொகுதியை ராஜ்குமாரும் அவரது மகன் கிஷின் ஆர்.கேயும் வாங்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

ஸ்காட்ஸ் ஸ்குவேர் கடைத்தொகுதி, வார்ஃப் எஸ்டேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வீலாக் பிராப்பர்டீஸ் என்று இதற்குமுன் அழைக்கப்பட்டது.

ஸ்காட்ஸ் ஸ்குவேர் கடைத்தொகுதியை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள தரப்பு, அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் வேளையில் குறிப்பிட்ட ஒரு தொகையை முன்பணமாகச் செலுத்தியிருப்பதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செப்டம்பர் மாதத்தின் முற்பாதியில் அதுகுறித்த விற்பனை ஒப்பந்தம் ஒன்று செய்யப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைத்தொகுதியில் கிட்டத்தட்ட 76,660 சதுர அடி வாடகைக்கு விடப்படலாம். ஒரு சதுர அடிக்கான விலை கிட்டத்தட்ட $4,175 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 130,900 சதுர அடியில் உள்ள மொத்த தரைப் பரப்பளவில் ஒரு சதுர அடியின் விலை $2,445.

ஸ்காட்ஸ் ஸ்குவேர் கடைத்தொகுதி, இரண்டு குடியிருப்புக் கட்டடங்களைக் கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த வளாகத்தில் கடைத்தொகுதி கிட்டத்தட்ட 43.3 பங்கு வகிக்கிறது. எஞ்சிய 56.7 விழுக்காட்டுப் பங்கைக் குடியிருப்புக் கட்டடங்கள் வகிக்கின்றன.

இந்நிலையில், ராஜ்குமாரின் ராயல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஆர்ச்சர்ட் சாலைக்கு அருகில் உள்ள ‘தி சென்டர்பாயிண்ட்’ வளாகத்திற்குப் பக்கத்தில் உள்ள 17 பாரம்பரிய கடைவீடுகளைக் கொண்ட கப்பலேஜ் டெரஸைப் பிரேசர்ஸ் பிராப்பர்ட்டி நிறுவனத்திற்கு $175 மில்லியனுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்த விற்பனை இரண்டு வாரங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது மகன் கிஷின், ஆர்பி கேபிட்டல் நிறுவனத்தைக் கட்டுப்படுத்துகிறார்.

குறிப்புச் சொற்கள்