தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தை - மகன் பூசல்; ‘சிடிஎல்’ குழுமத்தில் சிக்கல்

2 mins read
22232f06-1091-41a5-9713-6bd98a23ffba
சிட்டி டெவலப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத் தலைவர் குவெக் லெங் பெங் (இடம்), அவரது மகனும் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷெர்மன் குவெக். - கோப்புப் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்துச் சந்தை நிறுவனமான சிட்டி டெவலப்மென்ட்ஸ் லிமிடெட் (CDL) தலைவருக்கும் அவரது மகனுக்கும் இடையிலான சண்டை புதன்கிழமை (பிப்ரவரி 26) வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘சிடிஎல்’ நிறுவனத் தலைவர் குவெக் லெங் பெங், அவரது மகனும் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷெர்மன் குவெக்கை வெளிப்படையாகக் குறைகூறியுள்ளார்.

மகன் ஷெர்மன் தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்குச் சதி செய்ததாகவும் அதன் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்திருப்பதாகவும் திரு குவெக் கூறினார்.

இயக்குநர் வாரிய உறுப்பினர்களுடன் சேர்ந்து வாரியத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர மகன் ஷெர்மன் சதி செய்ததாக அவர் சொன்னார்.

திரு குவெக் லெங் பெங்கிற்கு இந்த ஆண்டு 84 வயது நிறைவடையவிருக்கிறது.

பதவிக் கவிழ்ப்புச் சதி முயற்சியைச் சரியான முறையில் கையாள்வதும் நிறுவனத்தின் நேர்மையைக் கட்டிக்காப்பதும் அவசியம் என்றார் அவர்.

“பொருத்தமான நேரத்தில் தலைமை நிர்வாக அதிகாரியை மாற்றத் திட்டமிடுகிறோம். நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களின் நலன்களைத் தீவிரமாகப் பாதுகாக்க, சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து ஆய்வுசெய்வோம்,” என்று அவர் கூறினார்.

திரு ஷெர்மனின் குழுவினர் இருமுறை, நியமனக் குழுவைப் புறக்கணித்து நிறுவனத்தின் நிர்வாகத்திலும் இயக்குநர் குழுக்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவசரகதியில் மேற்கொண்டதாக அவரது தந்தை கூறினார்.

இத்தகைய செயல்பாடு, சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை விதிமுறைகளுக்கும் நிறுவன நிர்வாக விதிமுறைகளுக்கும் புறம்பானது என்பதையும் அவர் சுட்டினார்.

இவ்வேளையில், தனது தந்தையின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகத் திரு ஷெர்மன், 49, கூறியுள்ளார்.

‘சிடிஎல்’ குழும இயக்குநர் வாரியத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற பிரச்சினைகளின் தொடர்பில் குழுமத் தலைவரும் வாரிய உறுப்பினர்கள் சிலரும் இத்தகைய தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.

குழும இயக்குநர் வாரியத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சார்பில் அந்த அறிக்கையைத் திரு ஷெர்மன் வெளியிட்டார்.

நிர்வாகத்தை மேம்படுத்துவதில் தானும் நிறுவன இயக்குநர்களும் எப்போதும் கவனம் செலுத்திவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றியே சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.

மதிப்பிற்குரிய குழுமத் தலைவரைப் பதவியிலிருந்து அகற்றும் எந்தவிதமான முயற்சியிலும் தனது தரப்பு ஈடுபடவில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வர்த்தக நடவடிக்கைகள் வழக்கம்போல் நடைபெறுவதாகவும் அவற்றில் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்றும் ‘சிடிஎல்’ தெரிவித்துள்ளது.

இருப்பினும் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பூசல் ‘சிடிஎல்’ ஊழியர்களையும் கவனிப்பாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்