தெம்பனிஸ் அவென்யூ 9ல் இருக்கும் புளோக் 499Cல் உள்ள குடியிருப்பு ஒன்றில் 62 வயது ஆடவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 24) பிணமாக மீட்கப்பட்டதாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது.
பக்கவாதத்தில் இருந்து மீண்ட அவர், எப்பொழுதும் தனது வீட்டின் வாயிற்கதவைத் தாழிடாமல் தூங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
நவம்பர் 24ஆம் தேதி, அவரைக் காண நண்பர் அவருடைய வீட்டிற்கு வந்திருந்தார்.
குடியிருப்பின் உள்ளே சென்று பார்த்த நண்பருக்கு அதிர்ச்சி காத்திருந்தது
படுக்கையறையில் அந்த ஆடவர் பிணமாகக் கிடந்தார். தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்ததாகக் கூறப்பட்டது. உடலைக் கண்ட மறுநொடியே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் மகனுக்குத் தகவல் கொடுத்தனர்.
தன் தாயாரின் மறைவுக்குப் பிறகு தனது தந்தை தெம்பனிசில் உள்ள குடியிருப்பில் தனியாக வசித்துவந்ததாக உயிரிழந்தவரின் மகன் ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
“வாரயிறுதி நாள்களில் நானும் என் சசோதரனும் என் தந்தையைப் பார்க்க இங்கு வருவோம். அவர் தினந்தோறும் என் குடும்பத்தினருக்குக் காலை வணக்கத்தை குறுச்செய்தி மூலம் அனுப்புவார். இதன்மூலம் அவர் நலமாக உள்ளார் என்பதை நாங்கள் அறிவோம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த மூன்று நாளாக அவர் குறுஞ்செய்தி அனுப்பவில்லை. இதனால், நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரைத் தெம்பனிஸ் குடியிருப்பிற்குச் சென்று பார்க்க வேண்டும் என எண்ணினேன். அதற்குள் இவ்வாறு நடந்துவிட்டது,” என மிகவும் மனவேதனையுடன் அவர் தெரிவித்தார்.

