மனிதர்களின் மதிய உணவு, குடல் நுண்ணுயிரி, கல்லீரல் சுகாதாரம் ஆகியவற்றை இணைக்கக்கூடிய ஒரு வகையான புரதம் குடலில் இருப்பதை சிங்கப்பூர் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் அதற்கான ஆராய்ச்சி மாதிரியாக மலத்தைப் பரிசோதித்தபோது, இதுபோன்ற புரதச்சத்து மிதமிஞ்சிய அளவில் இருப்போருக்கு நாளடைவில் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்பது தெரியவந்தது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஆண்ட்ரூ டான் தலைமையில் அந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
லீ கோங் சியான் (எல்கேசி) மருத்துவக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, குடலில் காணப்படும் ‘ஆஞ்சியோபோயட்டின்-மாதிரி 4’ என்னும் ஒரு வகையான புரதம் மீது கவனம் செலுத்தியது.
அந்தப் புரதம் அதிகப்படியான நுண்துளைகளுடன் காணப்படும் ‘கசிவுக் குடல்’ என்ற நிலையை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், குடலில் உள்ள நுண்ணுயிரிகள் நேரடியாக கல்லீரலுக்குச் செல்ல அது அனுமதிக்கிறது. அங்கு அவை அழற்சியையும் கொழுப்பு படிவதையும் தூண்டக்கூடும்.
மருத்துவத்திற்கு முந்தைய மாதிரிகளை மட்டுமல்லாமல், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று நோயாளிக் குழுக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மனிதத் தரவுகளையும் அறிவியலாளர்கள் பயன்படுத்தினர்.
இந்த ஆராய்ச்சியை முழுமையாக நிறைவுசெய்ய மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆனது.
தொடர்புடைய செய்திகள்
மனிதர்களின் உணவுமுறை அவர்களின் கல்லீரலை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைப் பற்றிய ஒரு தெளிவை ஆராய்ச்சி வழங்கியதாக இணைப் பேராசிரியர் டான் கூறினார்.
“உண்ணும் உணவு குடலில் உள்ள நுண்ணுயிரிகளை மாற்றுகிறது என்பது நாம் அறிந்தது. எனவே, சாப்பாட்டு முறையில் வேறுபடும் தாய்லாந்து, சீனா, இந்தியா ஆகிய நாடுகளைத் தேர்ந்தெடுத்தோம். அந்த நாடுகளின் உணவுமுறை சிங்கப்பூரின் உணவுமுறையைப் போன்று இருக்கும் என்று நம்பியதன் அடிப்படையிலான தேர்ந்தெடுப்பு அது,” என்றும் அவர் தெரிவித்தார்.

