சிங்கப்பூரின் மேற்கு, வடமேற்கு வட்டாரங்களில் சேவையாற்றக்கூடிய புதிய எம்ஆர்டி ரயில் பாதை ஒன்றின் சாத்தியம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது.
தற்போதைக்கு ‘தெங்கா பாதை’ என்று அறியப்படும் இப்பாதைத் திட்டத்தில் தெங்கா, புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்வே, புக்கிட் மேரா போன்ற வட்டாரங்கள் அடங்கும்.
எம்ஆர்டி ரயில் விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கம் ஆராய்ந்து வரும் இரண்டு புதிய பாதைகளில் இதுவும் ஒன்றாகும். போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதம் மார்ச் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்தபோது போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் இத்திட்டங்களை விவரித்தார்.
ஆராயப்படும் மற்றொரு ரயில் பாதை தற்போதைக்கு ‘சிலேத்தார் பாதை’ என்று அழைக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு முதல் அப்பாதை தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.
இது உட்ல்ண்ட்ஸ் வட்டாரத்தில் தொடங்கி செம்பவாங், செங்காங் வெஸ்ட், சிராங்கூன் நார்த், வாம்போ, காலாங் வட்டாரங்களைக் கடந்து சென்று எதிர்காலத்தில் அமையவுள்ள கிரேட்டர் சவுதன் வாட்டர்ஃபிரண்ட் பகுதியில் முடிவுறலாம் என்றார் திரு சீ.
ஆராயப்படும் தெங்கா, சிலேத்தார் பாதைகள் இரண்டும் கிரேட்டர் சவுதன் வாட்டர்ஃபிரண்ட் பகுதியில் சந்திப்பதாக அமையலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் செய்துள்ள ஆரம்பகால மதிப்பீடுகள் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரண்டு பாதைகளையும் ஒரே பாதையாக்கும் சாத்தியமும் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் சீ சுட்டினார். இரண்டு பாதைகளும் இயங்கினால் அதிகபட்சம் 10 எம்ஆர்டி பாதைகள் 2040களில் தீவு எங்கும் குறுக்கிட்டுச் செல்லலாம். தற்போது இந்த எண்ணிக்கை ஆறு.
இதற்கிடையே, ஜூரோங் வட்டாரப் பாதையை தெற்கே நோக்கி நீட்டித்து வட்டப் பாதையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார் திரு சீ. முதன்முதலில் இத்திட்டம் முன்வைக்கப்பட்டு இதோடு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறியப்படுகிறது.
வெஸ்ட் கோஸ்ட் நீட்டிப்புத் திட்டமாக அறியப்படும் இது, மேற்குப் பகுதியில் இணைப்புத்தன்மையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூரோங் வட்டாரப் பாதையை நீட்டிப்பதன்வழி அதன் பாண்டான் ரெசர்வார் நிலையம், குறுக்குத்தீவுப் பாதையில் அமையவுள்ள வெஸ்ட் கோஸ்ட் நிலையத்துடன் 2030களின் பிற்பாதியில் இது நிறைவுறும் என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வெஸ்ட் கோஸ்ட் நீட்டிப்பின் மூலம் மேற்குப் பகுதியிலிருந்து மத்திய நகர்ப்பகுதிக்குச் செல்லும் பயணம் 20 நிமிடங்கள் குறையும் என்று திரு சீ குறிப்பிட்டார்.
மக்களுக்கு மாற்றுப் பயணத் தெரிவு ஒன்றை வழங்குவதன் மூலம் எம்ஆர்டி ரயில் கட்டமைப்பின் ஒட்டுமொத்த மீள்திறனை மெருகேற்ற முடியும் என்று நம்பப்படுகிறது.

