பொட்டலப் பெட்டிகளுக்குக் கட்டணம்: சுற்றுப்புற மன்றம் பரிந்துரை

பொட்டலப் பெட்டிகளுக்குக் கட்டணம்: சுற்றுப்புற மன்றம் பரிந்துரை

படம்: கார்ட்டன் பாக்சஸ் இணையத்தளம்

25 Nov 2026 - 9:51 pm

2 mins read

கழிவுப் பிரச்சினையைச் சமாளிக்க, பொட்டலப் பெட்டிகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் அதன் இறக்குமதியாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றம் பரிந்துரைத்துள்ளது.

பெட்டிகளின் அளவு, சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் மாறுபடும் எனப் புதன்கிழமை (நவம்பர் 25) வெளியான அதன் 23 பக்க அறிக்கை கூறுகிறது.

பானக் கொள்கலன் திருப்பித் தரும் திட்டத்தைப் போல அனைத்துப் பொட்டலப் பெட்டிகளுக்கும் விரிவுபடுத்த அது பரிந்துரைத்தது.

சிங்கப்பூரின் உள்நாட்டுக் கழிவுகளில் மூன்றில் ஒரு பங்கு பொட்டலப் பெட்டித் தொடர்புடைய கழிவுகளாகும்.

நாட்டின் ஒரே குப்பை நிரப்பும் நிலமான செமாக்காவ் 2035 ஆம் ஆண்டுக்குள் நிரம்பிவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய திட்டம் பிளாஸ்டிக், உலோகப் பானக் கொள்கலன்களை மட்டுமே உள்ளடக்குகிறது. ஆகவே, பிளாஸ்டிக், காகிதம், அட்டை, கண்ணாடி, உலோகம் உள்ளிட்ட அனைத்துப் பொட்டலப் பொருள்களையும் உள்ளடக்கும் கட்டமைப்பை மன்றம் முன்மொழிந்துள்ளது.

இத்திட்டத்தைக் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தலாம். அடுத்த மூன்றாண்டுகளில் ஆய்வுகளும் முன்னோடித் திட்டங்களும் நடத்தப்பட்டு, அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் விரிவாக்கப்பட்ட கட்டமைப்பை நடைமுறைப்படுத்தலாம் என அறிக்கை குறிப்பிட்டது.

அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, தற்போதைய திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி அதன் செயல்திறனை மதிப்பிடுவதே அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை என்றார்.

அனைத்துப் பொருள்களையும் மறுபயனீடு செய்வது நோக்கமன்று, மறுபயனீடு செய்ய முடியாத பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்து, உற்பத்தியாளர்கள் குறைவான பொட்டலப் பெட்டிகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதே நோக்கம் என மன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
கழிவுமறுசுழற்சிசுற்றுச்சூழல்