பல பல்கலைக்கழகத் தங்குவிடுதிக் கட்டணம் $80 வரை அதிகரிப்பு

பல பல்கலைக்கழகத் தங்குவிடுதிக் கட்டணம் $80 வரை அதிகரிப்பு

2 mins read
f999b859-3db1-491e-8f93-6532381cb42e
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தங்குவிடுதிகளில் ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உள்ளூர் பல்கலைக்கழகங்கள் பல தங்களின் தங்குவிடுதிகளுக்கான கட்டணத்தை 80 வெள்ளி வரை அதிகரித்திருக்கின்றன.

வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் புதிய கல்வியாண்டுக்கு இது பொருந்தும். கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத் தங்குவிடுதிக் கட்டணம் அதிகரித்துவருவது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணையத்தளங்களில் உள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.

தங்குவிடுதிகளில் உள்ள பலவகையான அறைகளுக்கும் கட்டண உயர்வு பொருந்தும் என்று சீன ஊடகமான சாவ்பாவ் முதன்முதலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தெரிவித்தது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

எடுத்துக்காட்டாக, 1955ஆம் ஆண்டு கட்டப்பட்ட நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ‘ஹால் ஆஃப் ரெசிடன்ஸ் 1’ தங்குவிடுதியின் வேறு அறையுடன் வசதிகளைப் பகிர்ந்துகொள்ளும் ‘என்-சுவீட்’ அறையில் சென்ற ஆண்டு தங்கிய மாணவர்கள் மாதந்தோறும் 558 வெள்ளியைக் கட்டணமாகச் செலுத்தினர். வரும் கல்வி ஆண்டு அதே அறைக்கான கட்டணம் கிட்டத்தட்ட 50 வெள்ளி அதிகரித்து 602 வெள்ளியாக உள்ளது.

குளிரூட்டு வசதி இல்லாத ‘என்-சுவீட்’ அறைகளுக்கான கட்டணமும் கிட்டத்தட்ட அதேபோல் எட்டு விழுக்காடு அதிகரித்து 412 வெள்ளியாகப் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆகப் பழைமையான ‘கிங் எட்வர்ட் VII ஹால்’ தங்குவிடுதியில் உள்ள குளிரூட்டு வசதி இல்லாத ‘டபிள் ரூம்’ அறையில் தங்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் வாரத்துக்கு 86 வெள்ளியைக் கட்டணமாகச் செலுத்தினர். இப்போது புதிய கல்வியாண்டுக்கு அக்கட்டணம் 28 வெள்ளி அதிகரித்து 114 வெள்ளியாகப் பதிவாகியுள்ளது.

சென்ற கல்வியாண்டில் அந்தக் கட்டணம் 104 வெள்ளியாக இருந்தது.

அவற்றைப் போல் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் அதன் தங்குவிடுதிக் கட்டணத்தை 2027/28 கல்வியாண்டில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026/27 கல்வியாண்டில், அதன் தங்குவிடுதியில் உள்ள சிறிய ‘சிங்கில்’ அறைக்கான மாதந்தரக் கட்டணம் 873 வெள்ளியாக இருந்தது. அக்கட்டணம் 2027/28 கல்வியாண்டில் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு கூடி 917 வெள்ளியாக இருக்கும் என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்