பாசிர் ரிஸ்ஸில் டிப்பர் லாரியுடன் மோதிய சைக்கிள்; பெண் உயிரிழப்பு

பாசிர் ரிஸ்ஸில் டிப்பர் லாரியுடன் மோதிய சைக்கிள்; பெண் உயிரிழப்பு

2 mins read
474b7411-9bbf-4d23-94d4-e7a5e2907827
விபத்து நிகழ்ந்த பகுதியான பாசிர் ரிஸ் டிரைவ் 4 - பாசிர் ரிஸ் டிரைவ் 3 சந்திப்பு. - படம்: கூகல் மேப்ஸ்

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் சனிக்கிழமை (மே 23) பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் 35 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

டிப்பர் லாரியுடன் மோதியதில் உயிரிழந்த சைக்கிளோட்டி ஒரு பெண்மணி என்பது தெரியவந்தது.

பாசிர் ரிஸ் டிரைவ் 4, பாசிர் ரிஸ் டிரைவ் 3 ஆகியவை சந்திக்கும் இடத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அறிவிப்பை மேற்கோள் காட்டி அது குறிப்பிட்டது.

அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் டிப்பர் லாரி ஓட்டுநரான 29 வயது ஆடவர் உதவி வருகிறார்.

கடந்த ஆண்டின் ஆறு மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 650 சைக்கிளோட்டிகளுக்கு அபராதச் சீட்டு வழங்கப்பட்டது.

சைக்கிளோட்டிகளின் விதிமீறல்களில் போக்குவரத்து சமிக்ஞைகளைப் பின்பற்றாதது, சைக்கிள் ஓட்டும்போது தலைக்கவசம் அணியாதது போன்றவையும் அடங்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 149 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை பத்தாண்டு காணாத உச்சம்.

இந்நிலையில், இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் வேக வரம்புக் கருவியைக் கனரக வாகனங்களில் பொருத்தாதவர்களுக்கு எதிராக போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

3,501 கிலோவுக்கும் 12,000 கிலோவுக்கும் இடைப்பட்ட சுமையை ஏற்றிச் செல்லும் லாரிகள் மணிக்கு 60 கிலோமீட்டருக்கு மேல் செல்லாத வகையில் வேக வரம்புக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
விபத்துலாரிசைக்கிள்உயிரிழப்பு