மலேசியக் கலாசாரத்தைப் பறைசாற்றும் விழா

1 mins read
bb3b45a0-05e0-4702-b209-1d401a2ebcae
எக்ஸ்போவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விழாவை ஒட்டிய தகவல்கள் பகிரப்பட்டன.  - படம்: அனுஷா செல்வமணி

மலேசியக் கலாசாரத்தைப் பறைசாற்றும் வண்ணம் சிங்கப்பூரில் கூடிய விரைவில் கலாசார விழா ஒன்று நடைபெறவுள்ளது.

‘மலேசியா ஃபெஸ்ட்’ எனும் இந்த விழாவில் மலேசிய உணவு வகைகள், ஆடை அணிகலன்கள், சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை சிங்கப்பூரர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

எட்டாவது முறையாக நடைபெறும் இவ்விழாவில் சிலாங்கூர், ஜோகூர், பினாங்கு, சரவாக் ஆகிய பல்வேறு மலேசிய மாநிலங்களின் புகழ்பெற்ற உணவு வகைகள், பழங்கள் போன்றவற்றைச் சுவைக்கும் வாய்ப்பும் காத்திருக்கிறது.

எக்ஸ்போவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விழாவை ஒட்டிய தகவல்கள் பகிரப்பட்டன. 

சிங்கப்பூரில் செயல்படும் மெகாஎக்ஸ்பிரஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், மலேசியாவின் கூட்டரசு வேளாண் சந்தை ஆணையத்தின் ஆதரவோடு இவ்விழாவை வழிநடத்தும்.

லொங்கான், பொமெலோ, செம்பெடக், பல்வேறு சாக்லேட், கேக் வகைகள், தின்பண்டங்கள் ஆகியவை உணவுப் பட்டியலில் அடங்கும்.

அவற்றுடன், புகழ்பெற்ற மலேசிய உணவுவகைகளான பினாங்கு சார் குவே தியாவ், ஐயாம் கோரேங் குன்யிட், லெமாங் ஆகியவற்றையும் சுவைத்து மகிழலாம்.

மேலும், மலேசியாவின் பெயர்பெற்ற ஒப்பனை, நவநாகரிக வணிகச்சின்னப் பொருள்கள் போன்றவற்றையும் மக்கள் வாங்கலாம்.

இவ்விழா இம்மாதம் 31லிருந்து ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை எக்ஸ்போ 5A, 5B அரங்குகளில் இடம்பெறும். 

மொத்தம் 321 சாவடிகளுடன் காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை இவ்விழா இடம்பெறும். அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்