கிறிஸ்துமசுக்குப் பிறகு புத்தாண்டு, பொங்கல் என்று பண்டிகைக் காலம் நம்மை மகிழ்விக்கக் காத்திருக்கும் வேளையில் விடுமுறை உணர்வில் திளைத்திருக்கச் சிறந்த உணவுகளைக் காட்டிலும் வேறு வழி இருக்கமுடியாது.
அன்பின் சுவையை உங்கள் அன்பிற்குரியோர் அறியச் செய்திடுங்கள். குடும்பத்தினர், நண்பர்களை அசத்தும் வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விழாக்கால உணவுகளைச் செய்துகொடுத்து உங்கள் பாசத்திற்குரியோரின் பாராட்டுகளைப் பெற்றிடுங்கள்.
தமிழ் முரசு வாசகர்களுக்காக உலகப் புகழ் பெற்ற சமையற்கலைஞர் டாக்டர் குமரேசன் கோகுலநாதன் வழங்கும் பலகாரக் குறிப்புகளில் சில உங்கள் பார்வைக்காக.
கவுனி அரிசி பிரவுனி - கருப்பட்டி சாக்லெட் சுவைச்சாறு
தேவையான பொருள்கள்:
கவுனி அரிசிப் பொடி - 300 கிராம்
முட்டை - 16
டார்க் சாக்லெட் - 1 கிலோ
கோக்கோ பொடி - 200 கிராம்
தொடர்புடைய செய்திகள்
பேக்கிங் பொடி - 15 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 600 கிராம்
பால் - 500 மில்லிலிட்டர்
வெண்ணிலா எசன்ஸ் - 15 மில்லிலிட்டர்
வெண்ணெய் - 1 கிலோ
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அது கொதித்துவரும் நிலையில், அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சாக்லெட், சர்க்கரை, பால், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கரையும் வரை, கட்டி இல்லாமல் கிளற வேண்டும்.
சாக்லெட் கலவை நன்றாகக் கரைந்த பிறகு சிறிது நேரம் சூடு ஆறியபின் அதில் முட்டையைச் சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும்.
முட்டைக் கலவை சாக்லெட்டுடன் கலந்த பிறகு அதில் கவுனி அரிசிப் பொடி, டார்க் கோக்கோ பொடி, பேக்கிங் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி இல்லாமல் மெதுவாக அடித்து, பின்பு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வேகமாக அடித்துக் கலக்குங்கள்.
பிரவுனி கலவை தயாரான பிறகு ஓர் அலுமினியத் தட்டில், வழுவழுப்பான தாளைப் பரப்பி, சூட்டடுப்பில் (oven) 160° சூட்டில் 35 முதல் 40 நிமிடம் வரை வேகவைக்க வேண்டும்.
பிரவுனி நன்றாக வெந்த பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கி, தட்டில் வைத்து அவற்றின்மீது கருப்பட்டி சாக்லெட் சாற்றை ஊற்றிப் பரிமாறலாம்.
கருப்பட்டி சாக்லெட் சுவைச்சாறு செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 500 கிராம் கருப்பட்டியைப் போட்டு, 300 மில்லிலிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.
பிறகு அதில் கோக்கோ பொடியைச் சேர்த்துக் கட்டிபடாமல் நன்றாகக் கெட்டியாக்கிக் கொள்ளுங்கள். சிறிது சூடு ஆறிய பிறகு சாக்லெட் சுவைச்சாற்றை பிரவுனியின்மீது ஊற்றிப் பரிமாறலாம்.
புத்தாண்டுச் சிறப்பு கேசரி
தேவையான பொருள்கள்:
வெள்ளை ரவை - 1 கப்
நாட்டுச் சர்க்கரை - 1 கப்
நறுக்கிய முந்திரி - 20 கிராம்
காய்ந்த திராட்சை - 20 கிராம்
நறுக்கிய பாதாம் - 20 கிராம்
நறுக்கிய பிஸ்தா - 20 கிராம்
நறுக்கிய பேரீச்சம்பழம் - 50 கிராம்
நறுக்கிய உலர் அத்திப்பழம் - 50 கிராம்
நறுக்கிய ஆரஞ்சுத் தோல் - 1 மேசைக்கரண்டி
நறுக்கிய உலர் இஞ்சி - 1 மேசைக்கரண்டி
பட்டை
ஏலக்காய்
அன்னாசிப்பூ - அரைத்த பொடி 1/2 மேசைக்கரண்டி
ஜாதிக்காய்
நெய் - 100 மில்லி
ரம் எசன்ஸ் - 15 மில்லி
வெண்ணிலா எசன்ஸ் - 5 மில்லி
செய்முறை:
ஒரு கடாயில் நெய் ஊற்றி ரவையைப் பொன் நிறமாக வறுக்க வேண்டும்.
பிறகு அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதமான உலர்பழங்களையும் பருப்புகளையும் (Nuts) சேர்த்து வறுக்க வேண்டும் (ஒரு நிமிடம் போதும்).
1 கப் ரவைக்கு 3 கப் தண்ணீர் ஊற்றி, கட்டிபடாமல் நன்றாகக் கிளற வேண்டும். ரவை கட்டியான பிறகு அதில் நாட்டுச் சர்க்கரை, பட்டை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து கெட்டியாகும்வரை நன்றாகக் கிளற வேண்டும்.
நிறைவாக, குறிப்பிடப்பட்டுள்ள எசன்ஸ் வகைகளைச் சிறிது நெய் சேர்த்து ஒரு தட்டில் ஊற்றி, சூடு ஆறிய பிறகு துண்டுகளாகப் பரிமாறவும்.

