தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விழாக்கால ஏற்றம்: சிங்கப்பூரின் உணவு, பானத் துறை கடந்த ஆண்டைவிட செழிப்பு

2 mins read
c52a7dae-9f27-4be4-90df-d9a0a94dd9ac
சிங்கப்பூரர்களும் சுற்றுப்பயணிகளும் தங்களது கொண்டாட்டங்களுக்கான முன்பதிவுகளை நவம்பர் தொடக்கத்தில் இருந்தே செய்து வருகின்றனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் சிங்கப்பூரின் உணவு, பானத் துறைக்கு ஏற்றம் தரும் மாதம்.

ஆண்டிறுதியில் சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகமானோர் பயணம் செல்லும் நிலையிலும் அந்தத் துறை சிறந்து விளங்கும் மாதமாக டிசம்பர் தொடருகிறது.

இங்குள்ள ஹோட்டல்களிலும் உணவகங்களிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டு உள்ளன.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நெருங்கும் நிலையில் அவற்றில் பல நிரம்பும் நிலையில் உள்ளன.

சிங்கப்பூரர்களும் சுற்றுப் பயணிகளும் தங்களது கொண்டாட்டங்களுக்கான முன்பதிவுகளை நவம்பர் தொடக்கத்தில் இருந்தே செய்து வருகின்றனர்.

இம்மாத நடுப்பகுதி நிலவரப்படி ,பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான முன்பதிவுகள் முடிந்துவிட்டன அல்லது முடியும் நிலையில் உள்ளன.

அத்தகைய ஹோட்டல்களில் ஒன்று ‘ஹில்ட்டன் சிங்கப்பூர் ஆர்ச்சர்ட்’.

அந்த ஹோட்டலில் உள்ள ‘எஸ்டேட்’ உணவகத்தின் தேவை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக ஹோட்டல் நிர்வாகி லிண்டா ரெட்டி தெரிவித்து உள்ளார்.

டிசம்பர் மாதத்தில் இதுவரை இரவு உணவுக்கான இருக்கைகளில் 85 விழுக்காடு நிரம்பி உள்ளதாகவும் டிசம்பர் 18 முதல் கிறிஸ்துமஸ் வரையிலான பல தேதிகளுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, தேவைப்படும் நாள்களுக்கு இரு நாள்கள் முன்னதாக முன்பதிவுகள் செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டு ஒரு மாதத்திற்கு முன்னரே செய்யப்பட்டதாக திருவாட்டி லிண்டா குறிப்பிட்டார்.

இவ்வாண்டு தேவை அதிகரித்திருப்பதை அந்த நிலவரம் உணர்த்துவதாகவும் அவர் சொன்னார்.

அதேபோல பான் பசிபிக் ஹோட்டல்ஸ் குழுமத்தின் (PPHG) உணவு, பானப் பிரிவுக்கான முன்பதிவுகள் நவம்பர் இறுதிவாரத்திலேயே தொடங்கிவிட்டன.

“கடந்த ஆண்டு முன்பதிவுகள் டிசம்பர் மாதம் முழுவதும் சீராக நடைபெற்றன. மாதத்தின் நடுப் பகுதியில் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டன.

“ஆனால், இவ்வாண்டு முன்கூட்டியே அதிகமான முன்பதிவுகள் நடைபெற்றன,” என்று அந்த ஹோட்டலின் பேச்சாளர் ஒருவர் ‘பிஸ்னெஸ் டைம்ஸ்’ ஊடகத்திடம் கூறினார்.

அந்த ஹோட்டல் குழுமத்தின் பல்வேறு உணவகங்களில் 90 விழுக்காட்டுக்கு மேலான இருக்கைகள் இந்த மாதம் முழுவதும் நிரம்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்