வனப்பகுதியில் விடுவிக்கப்படும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது

வனப்பகுதியில் விடுவிக்கப்படும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது

2 mins read
f52abcc5-0c5c-4908-812b-626e29c22a59
விசாக தினத்திற்கு முன்தினம் இரவு, பலர் தெக்சென் சோலிங் கோயிலுக்குத் தங்களின் செல்லப்பிராணிகளை அழைத்துச் சென்று ஆசீர்வாதம் பெற்றனர். - படம்: இபிஏ
Google News Preferred Icon

விசாக தினத்தன்று விலங்குகளை வனப்பகுதிகளில் விடுவிப்பது பரிவு காட்டும் ஒரு செயலாகக் கருதப்பட்டாலும் பல பௌத்த அமைப்புகள் இதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்திவர பௌத்த சமயத்தினரிடையே இந்த வழக்கம் குறைந்துவருகிறது.

இந்த வழக்கத்தைக் கைவிடுமாறு தேசிய பூங்காக் கழகமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருவதற்கிடையே, 2019ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆண்டு வரை மூன்று விலங்குகள் மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் இவ்வாறு விடுவிக்கப்பட்டன.

அதற்குமுன் ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு புகார்கள் பதிவானதாக ஏக்கர்ஸ் அமைப்பு தெரிவித்தது.

வனவிலங்குச் சட்டத்தின்கீழ் குற்றம் புரிவோருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தேசிய பூங்காக் கழகம் 2006ஆம் ஆண்டு தொடங்கி விசாக தினத்துக்கு முன்னதாக பூங்காக்கள், வனப்பகுதிகள், நீர்த்தேக்கங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களுக்கு அதன் அதிகாரிகளையும் தொண்டூழியர்களையும் அனுப்பி, விலங்குகளை விடுவிப்பது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் பணியை மேற்கொள்ள வைத்துள்ளது.

“வனப்பகுதிகளில் விலங்குகளை விடுவிப்பதால் விலங்குகளுக்கும் நம் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படலாம். விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கலாம். புதிய சூழலில் அவை உயிர்வாழும் சாத்தியமும் இல்லை,” என்று தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த திரு லிம் லியாங் ஜிம் கூறினார்.

விசாக தினத்தன்று ஒருவர் மேற்கொள்ளும் நற்செயல்களுக்கான பலன் பலமடங்காகும் என்று பௌத்த சமயத்தினர் நம்புவதால் இத்தினம் அவர்களுக்குக் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தது.

மந்திரங்களை ஓதுதல், சைவ உணவைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்றவற்றுடன் பழங்காலத்தில் பௌத்த சமயத்தினர் பறவைகளையும் விலங்குகளையும் விடுவிப்பதைப் பரிவு காட்டும் ஒரு செயலாகக் கருதி அதில் ஈடுபட்டனர்.

அண்மைய காலமாக ‘தெக்சென் சோலிங்’ போன்ற பௌத்த அமைப்புகள் விலங்குநலனுக்காக வேறுபல வழிகளில் குரல்கொடுக்குமாறு அறைகூவல் விடுத்துவருகின்றன. அவற்றில் சைவ உணவுமுறையைப் பின்பற்றுதல், விலங்கு மீட்புப் பணிகளில் ஈடுபடுதல், விலங்குக் காப்பகங்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவை அடங்கும்.

விசாக தினத்துக்கு முன்தினம் ‘தெக்சென் சோலிங்’ 2022ஆம் ஆண்டு முதல் பீட்டி லேனில் உள்ள அதன் கோயிலில் விலங்குகளுக்கென வருடாந்திர ஆசீர்வாத நிகழ்வை இரவில் நடத்திவருகிறது.

குறிப்புச் சொற்கள்
ஏக்கர்ஸ்குற்றம்தேசிய பூங்காக் கழகம்விலங்குஅபராதம்