இயற்கை வெளியில் குறியிட்ட பாதைகளிலிருந்து விலகிச் சென்ற நடைப்பயணிகளும் சைக்கிளோட்டிகளும் அண்மைய ஆண்டுகளில் குறைந்துவிட்டதாக தேசிய பூங்காக் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
கழகம் அமலாக்க நடவடிக்கை எடுத்த இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை, கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பயணத் தடை செய்யப்பட்ட காலமான 2021ல் ஏறக்குறைய 430ஆக இருந்த நிலையில், 2024ல் அது ஏறத்தாழ 85ஆகக் குறைந்துள்ளதாக பூங்காக் கழகத்தின் பாதுகாப்புப் பிரிவின் குழும இயக்குநர் லிம் லியாங் ஜிம் கூறினார்.
மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதியின் பொதுமக்களுக்கு மூடப்பட்ட ஒரு பகுதியில் பிரபலமான, அங்கீகரிக்கப்படாத சைக்கிளோட்டும் பாதையில் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஆடவர் ஒருவர் துப்பாக்கிக் குண்டால் தாக்கப்பட்ட பின்னர், இத்தகைய நடவடிக்கைகளின் அபாயங்கள் குறித்து ஜூன் மாதம் தெரிவிக்கப்பட்டது.
எச்சரிக்கைப் பலகைகளைப் புறக்கணித்து, பாதையிலிருந்து விலகிச் செல்வோருக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு லிம் கூறினார். அவர்களில் பெரும்பாலானோருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.
சிலர்மீது மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. அண்மையில் முடிவடைந்த வழக்கில், ஒரு நாயை இயற்கை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றதற்கும் அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்கும், பிற குற்றங்களுக்கும் 2021ல் ஆடவர் ஒருவருக்கு $11,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சம்பவங்கள் குறைந்துள்ளபோதும், தவறிழைக்கும் ஒவ்வொருவரும் தமக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயத்தை எதிர்கொள்வதுடன், சுற்றுச்சூழலுக்கும் அங்கு வாழும் வனவிலங்குகளுக்கும் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

