இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கணக்கிடப்பட்ட பொதுப் போக்குவரத்துப் பயணங்களின் எண்ணிக்கையின்படி, செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அன்றாடம் சராசரியாக ஏறக்குறைய 8.1 மில்லியன் பேருந்து, ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த எண்ணிக்கை, திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட 7.98 மில்லியன் பயணங்களைவிட 1.5 விழுக்காடு அதிகம்.
நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கிய ஆக அண்மைய புள்ளிவிவரங்களில் இந்த நிலவரம் கண்டறியப்பட்டது.
ஒப்புநோக்க, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர் 2019ல் முதல் எட்டு மாதங்களில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அன்றாட சராசரி பொதுப் போக்குவரத்துப் பயணங்களின் எண்ணிக்கை 8.3 மில்லியனாக இருந்தது. இது, திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பதிவான 8.4 மில்லியன் பயணங்களைவிட குறைவு.
மேலும், 2019 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட அன்றாட சராசரிப் பயணிகளின் எண்ணிக்கை, அதே காலகட்டத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பதிவான 8.37 மில்லியனைவிட அதிகம்.
2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, வெள்ளிக்கிழமை காலை உச்ச நேரத்தில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோரின் சராசரி எண்ணிக்கை, புதன்கிழமை எண்ணிக்கை 87 விழுக்காடாக இருந்தது என ஆணையம் கூறியது. ஒப்புநோக்க, 2019ன் இதே காலகட்டத்தில் இந்த விகிதம் 97 விழுக்காடாக இருந்தது.
பல நிறுவனங்களும் செயல்படுத்தியுள்ள நீக்குப்போக்கான வேலை நடைமுறைகளை இந்தப் பயண நிலவரம் வெளிப்படுத்துவதாக மனிதவள, வர்த்தக நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
பொதுவாக, திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர். அந்தந்த வாரத்துக்கான வேலைகளை திங்கட்கிழமை திட்டமிடவும் வார முடிவில் பணிகளை வெள்ளிக்கிழமை நிறைவு செய்ய முடிவதாகவும் அவர்கள் கூறினர்.
நிலவரம் இப்படி இருந்தாலும், பேருந்து அல்லது ரயில் சேவையை அடிக்கடி வழங்குவதில் ஆணையம் அநேகமாக மாற்றம் செய்யாது என பொதுப் போக்குவரத்து நிபுணர்கள் கருத்துரைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏனெனில், கட்டணங்கள் குறையாமல் பேருந்து, ரயில் சேவையின் எண்ணிக்கை குறைந்தால் பயணிகள் அதிருப்தி அடைவர் என்றார் போக்குவரத்துப் பொறியியல் ஆலோசகர் கோபிநாத் மேனன்.

