மின்சைக்கிள்களை (PABs) விற்கும் சில்லறை வர்த்தகர்கள் தொடர்பான குற்றங்கள் கடந்த ஆண்டு அதற்கு முந்திய ஈராண்டுகளைக் காட்டிலும் குறைந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு முழுவதும் மின்சைக்கிள் சம்பந்தப்பட்ட 17 குற்றங்கள் பதிவாயின. அந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு 39ஆகவும் 2022ஆம் ஆண்டு 55ஆகவும் இருந்தன.
கடந்த ஆண்டின் குற்றங்கள் 2022ஆம் ஆண்டு பதிவான குற்றங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மூன்று மடங்கு குறைவு.
பதிவுசெய்யப்படாத சாதனங்களைக் கடைகளில் வைத்திருந்தது, பதிவெண் தகடுகளைச் சரியாகக் காட்சிப்படுத்தாதது போன்றவை மின்சைக்கிள்கள் தொடர்பான வர்த்தகக் குற்றங்களில் அடங்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இ-பைக் எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள்களை ஆணையத்திடம் பதிவுசெய்வது அவசியம்.
சட்டவிரோதமாக மாற்றி அமைக்கப்பட்ட மின்சைக்கிள்கள், பொருந்தாத மின்கலம் (battery) போன்றவற்றை விற்பனை செய்ததற்காகக் கடந்த வாரம் சில்லறை வர்த்தகர் ஒருவருக்கு $7,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதுபோன்ற சட்டவிரோத சாதனங்களால் கடந்த ஆண்டு ஹவ்காங்கிலும் புக்கிட் பாத்தோக்கிலும் தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்தச் சம்பவங்களின்போது ஒருவருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன.
மின்சைக்கிள்களைச் சாலைகளிலும் பூங்கா இணைப்புகள் போன்ற பகிர்வுப்பாதைகளிலும் பயன்படுத்தலாம். அவற்றை பெரும்பாலும் உணவு விநியோக ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.