சிங்கப்பூரில் குறைவான மக்களே சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அதேநேரம் இணையம்வழி சட்டவிரோதச் சூதாட்டத்தில் அவர்கள் அதிகம் பங்கேற்பதாகவும் தெரியவந்து உள்ளது.
கடந்த ஆண்டு 10ல் 4 சிங்கப்பூர்வாசிகள் குறைந்தபட்சம் ஒருமுறை சூதாடியதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. இது 40 விழுக்காட்டைக் குறிக்கிறது.
அந்த விகிதம் 2017ஆம் ஆண்டு 52 விழுக்காடாகவும் 2020ஆம் ஆண்டு 44 விழுக்காடாகவும் இருந்தது. 2005ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் ஆய்வில் அந்த விகிதம் 58 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரில் சூதாட்ட நிலவரத்தை அறிய நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சூதாட்டப் பிரச்சினைகளுக்கான தேசிய மன்றம் (NCPG) கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் ஆய்வு அது. ஆய்வின் முடிவுகள் வியாழக்கிழமை (நவம்பர் 28) வெளியிடப்பட்டன.
இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளிலேயே கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட சூதாட்டப் பங்கேற்பு விகிதம்தான் ஆகக் குறைவு.
இருப்பினும், மாதம் ஒன்றுக்கு சூதாட்டத்திற்காகச் செலவிடப்படும் இடைநிலை தொகை கடந்த ஆண்டு $25க்கு அதிகரித்தது.
இதற்கு முன், 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்போது அந்தத் தொகை $15ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல, சட்டவிரோத இணையச் சூதாட்டத்தில் பங்கேற்போரின் விகிதமும் அதிகரித்து உள்ளது.
2020ஆம் ஆண்டு ஆய்வில் பங்கேற்றோரில் 0.3 விழுக்காடு இணையச் சூதாட்டத்தில் பங்கேற்றதாகக் கூறிய வேளையில் கடந்த ஆண்டு அந்த விகிதம் 1 விழுக்காடாக உயர்ந்தது.
ஆனால், சட்டவிரோத இணையச் சூதாட்டத்தில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை ஆய்வில் தெரிவிக்கப்பட்ட 1 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்று ‘பிளஸ்டு கிரேஸ் சோஷியல் சர்விசஸ்’ என்னும் சமூக சேவை அமைப்பின் நிர்வாக இயக்குநர் பில்லி லீ கூறியுள்ளார்.
காரணம், சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் அதுபற்றி வெளியில் தெரிவிப்பதில்லை. தாங்கள் பிடிபட்டுவிடக்கூடாது என்பதால் உண்மையை அவர்கள் கூறுவதில்லை என்றார் அவர்.
2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 18 வயதுக்கு மேற்பட்ட 3,007 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஆய்வில் பங்கேற்றோரிடையே நான்கு இலக்க எண் (4D), டோட்டோ (Toto) போன்ற சூதாட்டப் பழக்கம் பிரபலமாக இருந்தது.
கருத்துக் கூறியோரில் 30 விழுக்காட்டினர் 4Dயையும் 29 விழுக்காட்டினர் Totoவையும் தங்களது விருப்பமாகத் தெரிவித்தனர்.

