சென்ற ஆண்டு (2023) வேலையிடப் பாகுபாட்டை எதிர்கொண்ட ஊழியர்கள், வேலை தேடுவோர் விகிதம் மீண்டும் குறைந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
நியாயமான வேலை நியமன நடைமுறைகள் அறிக்கையில் அது தெரியவந்ததாக அமைச்சு கூறியது.
சிங்கப்பூரில் வேலையிடத்தில் நியாயமான நடைமுறை தொடர்பான தரநிலைகளில் நீடித்த, நிலையான மேம்பாடு ஏற்பாட்டுள்ளதை இது காட்டுவதாக அமைச்சு செப்டம்பர் 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
இருப்பினும், பாகுபாட்டை எதிர்கொண்டவர்களில் பெரும்பாலானோர் உதவி நாடவில்லை. வயது அடிப்படையிலான பாகுபாடுதான் அதிகம் பதிவாகியுள்ளது.
சென்ற ஆண்டு, ஆறு விழுக்காட்டு ஊழியர்கள் வேலையில் நியாயமற்று நடத்தப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. 2022, 2021ஆம் ஆண்டுகளில் அது முறையே 8.2%, 8.5% ஆக இருந்தது. 2018ஆம் ஆண்டு 24.1 விழுக்காட்டு ஊழியர்கள் வேலையிடப் பாகுபாட்டைச் சந்தித்தனர்.
சென்ற ஆண்டு வேலை தேடியபோது 23.4 விழுக்காட்டினர் பாகுபாட்டை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர். 2022ல் இந்த விகிதம் 23.8 விழுக்காடாகவும் 2021ல் 25.8 விழுக்காடாகவும் 2018ஆம் ஆண்டு 42.7 விழுக்காடாகவும் இருந்தது.
2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைந்ததற்குக் காரணம் ஊழியர்களை நடத்தவேண்டிய முறை குறித்த விழிப்புணர்வு முதலாளிகளிடம் ஏற்பட்டதே என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
வேலையிடத்தில் நியாயமான நடைமுறை தொடர்பான சட்டம் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் காணவிருக்கும் வேளையில் அமைச்சின் அறிக்கை வெளியாகியிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இச்சட்டத்தின்கீழ், முதலாளிகள் தங்கள் ஊழியர்களிடம் வயது, குடியுரிமை, பாலினம், திருமண நிலை, கர்ப்ப நிலை, இனம், உடற்குறை போன்ற அம்சங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது.
2023ல் வேலை தேடிய பலரும் வயது, குடியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டை எதிர்கொண்டதாகக் கூறினர்.
வேலை தேடிய 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் 37.9 விழுக்காட்டினர் வயது தொடர்பான பாகுபாட்டை எதிர்கொண்டனர்.
பாகுபாட்டை எதிர்கொண்டோரில் 29.3 விழுக்காட்டினர் மட்டுமே சென்ற ஆண்டு உதவி நாடினர். 2022ல் அந்த விகிதம் 35.3 விழுக்காடாக இருந்தது.
ஊழியர்கள் வேலையிடப் பாகுபாடு குறித்துப் புகாரளிக்க முன்வருவதற்குரிய நம்பிக்கையை வலுப்படுத்த, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சு கூறியது.

