கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகச் சிங்கப்பூரைத் திடல்தடப் போட்டிகளில் பிரதிநிதித்து வந்துள்ளார் திரு சுப்பையா வடிவேலு, 74.
இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், ஹாங்காங், தைவான் எனப் பல நாடுகளிலும் போட்டியிட்டுள்ள இவர், 60க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் கிண்ணங்களையும் வென்றுள்ளார்.
திடல்தடப் பயணம் போலவே துணைக் காவலதிகாரியாக இவர் மேற்கொண்ட பயணமும் நீண்டது. 1976 முதல் 2021ல் ஓய்வுபெறும் வரை அவர் அப்பணியை மேற்கொண்டார்.
“நான் 1976ல் ‘சிஐஎஸ்’ காவல்துறை (CIS Police) பிரிவில் சேர்ந்தபோது அதன் திடல்தடக் குழுவில் ஓடத் தொடங்கினேன். 1980ல் அது ‘எஸ்டி’ காவல்துறையென மறுமலர்ச்சி கண்டபின்பும் அதில் தொடர்ந்து பயிற்சி செய்தேன்,” என்றார் திரு சுப்பையா.
‘எஸ்டி’ நிறுவனத்தின் பிரிவுகளுக்கிடையே நடக்கும் திடல்தடப் போட்டிகளில் பல வெற்றிகளைக் கண்டுள்ள திரு சுப்பையா, தன் பிரிவிலிருந்த 30 பேரில் ஒரே தமிழராக ஓடினார். பின்பு, தேசிய மாஸ்டர்ஸ் திடல்திட வீரராக முன்னேறியதற்குத் தூண்டுகோலாக அமைந்தவர் தேசிய திடல்தட வீரர் சேகரன்.
“ஒரு சமயம் நான் அப்பர் தாம்சனிலிருந்து தோ பாயோவிற்கு ஓடிக்கொண்டிருந்தபோது திரு சேகரன் என்னைக் கண்டார். ‘நீ மெக்ரிச்சிக்கு வந்து எங்களுடன் பயிற்சி செய். விருப்பப்பட்டால் நீ சிங்கப்பூருக்காகக்கூட ஓடலாம்,” என அவர் ஊக்குவித்தார்,” என நினைவுகூர்ந்தார் திரு சுப்பையா.
அதனால் திரு சுப்பையா தீவிரமாகப் பயிற்சிசெய்யத் தொடங்கினார். 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சிங்கப்பூரை ‘மாஸ்டர்ஸ்’ அளவில் பிரதிநிதிக்க இவர் தகுதிபெற்றார்.
இவருடைய முதல் போட்டி மலேசியாவில் கிராஸ்-கன்ட்ரி (cross-country) 5 கிலோமீட்டர் ஓட்டமாக அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதைத் தொடர்ந்து ஆறு ஆசிய மாஸ்டர்ஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், அவற்றில் நான்கு பதக்கங்களை வென்றுள்ளார்.
‘எஸ்டி’யில் பணியாற்றியவரை ஆண்டுக்கு நான்கு வெளியூர்ப் போட்டிகளில் இவர் பங்கேற்றார்.
வயது கூடினாலும் வேகத்தில் குறைவில்லை
2006ஆம் ஆண்டில் பெங்களூரில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் போட்டியில் முதன்முதலாகக் கலந்துகொண்ட திரு சுப்பையா, 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் ஓடினார்.
“அப்போது எனக்கு வயது 55. என் சக போட்டியாளர்களுக்கோ வயது 35. அப்படியிருந்தும் நான் அவர்களுடன் போட்டியிட்டு ஓடியதைச் சிங்கப்பூரர்களும் வெளிநாட்டவரும் பாராட்டினர்,” என்றார் திரு சுப்பையா. அப்போட்டியில் சிங்கப்பூர் அணி மூன்றாம் நிலையில் வந்தது.
கியோட்டோ ஒசாக்கா போட்டியில் 60 வயதில் இவர் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் சிங்கப்பூர் இரண்டாம் நிலையைப் பிடித்தது.
ஆக அண்மையில் ஜோகூரில் 400 மீட்டர் போட்டியில் கலந்துகொண்டு, இரண்டாம் பரிசை வென்றார் இவர்.
“இப்போதெல்லாம் வார இறுதிகளில் 4-5 கிலோமீட்டர் ஓடுவேன்,” என்கிறார் திரு சுப்பையா.
மருத்துவக் காரணங்களால் இவர் கடந்த இரு மாதங்களாக ஓடுவதைத் தற்காலிகமாகக் குறைத்துள்ளார். எனினும், மீண்டுவந்து ஓடுவதே இவருடைய இலக்கு.
“இந்தியா, இலங்கை, தாய்லாந்து என அனைத்து நாடுகளிலும் 90, 100 வயதுவரை ஓடுபவர்கள் உள்ளனர். அவர்களைப் போல் எத்தனை வயது வரை என்னால் ஓட முடியுமோ அதுவரை ஓட விரும்புகிறேன்,” என்கிறார் திரு சுப்பையா.