தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டித் தொடரை முன்னிட்டு சிங்கப்பூரிலுள்ள குறைந்தது எட்டு உணவகங்கள், மதுபானக் கூடங்களுக்குக் கூடுதல் நேரம் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 12ஆம் தேதி நிலவரப்படி, உள்ளூர் உணவு, குளிர்பானக் கடைகளிலிருந்து வந்த எட்டு விண்ணப்பங்களுக்குக் கூடுதல் நேரம் மதுபானம் விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அது கூறியது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தைத் தாண்டி, கூடுதல் நேரத்திற்கு மது விற்பனை செய்ய விரும்பும் உரிமையாளர்கள் காவல்துறை ஒழுங்குப் பிரிவிடம் gobusiness.gov.sg/licences என்ற இணையப்பக்கத்தின்வழி அனுமதி பெற வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்து முடிக்க ஏறக்குறைய மூன்று வாரங்கள் ஆகும் என்று ஜூன் 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் காவல்துறை தெரிவித்தது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், உலகின் ஆகப்பெரிய திருவிழாவான உலகக் கிண்ணப் போட்டி இம்முறை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறுகிறது.
வெளிநாடுகளுடனான நேர வித்தியாசம் காரணமாக சிங்கப்பூர் நேரப்படி பெரும்பாலான போட்டிகள் அதிகாலை வேளையில் ஒளிபரப்பப்படுகின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இறுதிப்போட்டி, சிங்கப்பூர் நேரப்படி ஜூலை 20 அதிகாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், காவல்துறை ஒழுங்குப் பிரிவின் முறையான அனுமதியின்றி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி மது விநியோகம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என்றும் விதிமுறைகளை மீறுவோருக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் காவல்துறை நினைவூட்டியுள்ளது.

