புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் சண்டை மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது; அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) காவல்துறை அங்கு மூவரைக் கைது செய்தது.
சம்பவ இடத்தில் போதைப்பொருள் என்று நம்பப்படும் பொருள்கள், மின்சிகரெட்டுகள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
ஜெலாப்பாங் ரோட்டில் உள்ள புளோக் 534ல் சண்டை ஏற்பட்டதாக செவ்வாய்க்கிழமை காலை 6.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததென காவல்துறை கூறியது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் பொருள்கள், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பொருள்கள், மின்சிகரெட்டுகள் ஆகியவற்றைக் காவல்துறை சம்பவ இடத்தில் கண்டெடுத்தது. தாக்குதலுக்குப் பயன்படக்கூடிய ஆயுதங்களைப் பொது இடங்களில் வைத்திருந்ததாகவும் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்ததாகவும் சந்தேகிக்கப்படும் ஆடவர் இருவர், ஒரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆடவர்களில் ஒருவருக்கு 23 வயது, மற்றொருவருக்கு வயது 26. பெண்ணின் வயது 23.
போதைப்பொருள் குற்றங்கள் என நம்பப்படும் விவகாரங்கள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மின்சிகரெட் குற்றம் என்று நம்பப்படும் விவகாரங்கள் சுகாதார அறிவியல் ஆணைத்திடம் ஒப்படைக்கப்படும்.

