கேளிக்கைக் கூடம் ஒன்றுக்கு வெளியே சண்டையிட்டதற்காக, சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த வாரண்ட் அதிகாரிகள் மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த மூவரும் நவம்பர் 8ஆம் தேதி அரசு நீதிமன்றங்களில் முன்னிலையாகினர்.
இரண்டாம் வாரண்ட் அதிகாரியான ரேஞ்சர் இங் ஸி வெய், 41, மூன்றாம் வாரண்ட் அதிகாரிகள் கெவின் நிக்கலஸ் சைமன், 34, கெல்வின் டாங் சீ டாட், 43, ஆகிய மூவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
பூன் லே வேக்கு அருகில், ‘தி ஷெவ்ரோன்ஸ்’ கேளிக்கை மன்றத்தில் உள்ள ‘ஏவியரி கேடிவி’யில் சண்டை நடந்தது.
சண்டை ஏற்பட்டதற்கு மதுபோதையும் ஒரு காரணம் என்று தீர்ப்பு வழங்கியபோது மாவட்ட நீதிபதி ஜான் இங் கூறினார்.
சண்டையைத் தொடங்கியதாக இங் ஒப்புக்கொண்டபோதும், மற்ற இருவரை அடித்ததற்கான காரணம் அவருக்கு நினைவில் இல்லை என்று நீதிபதி கூறினார்.
இங்கிற்கு $2,500, டாங்கிற்கு $1,500, சைமனுக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்ததும், அம்மூவருக்கும் எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுப்பது குறித்து சிங்கப்பூர் ஆயுதப்படை ஆராயும் என்று தற்காப்பு அமைச்சு செப்டம்பர் 30ஆம் தேதி கூறியிருந்தது.