சிங்கப்பூர் குழாய்களில் வரும் தண்ணீர் குறித்து உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டெரா எனப்படும் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பாளர்கள் தாங்கள் திரித்து, பொய்யாக கூறியவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன் உற்பத்தியாளர்கள் மன்னிப்புடன் இனி இதுபோல் சிங்கப்பூர் குழாய்களில் வரும் தண்ணீர் குறித்து தவறான, பொய்த் தகவல்களைக் கூறமாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளனர். இதைத் தெரிவித்த சிங்கப்பூர் போட்டித்தன்மை, வாடிக்கையாளர் ஆணையம் ஸ்டெரா நீர் சுத்திகரிப்பு சாதன உற்பத்தியாளர்கள் சிங்கப்பூர் குழாய்களில் வரும் தண்ணீர் ஸ்டெரா நீர் சுத்திகரிப்பு சாதனங்களைப் பயன்படுத்தாமல் அருந்துவது சுகாதாரத்துக்கு உகந்ததல்ல என்று கூறியிருந்ததாக விளக்கியது.
மேலும், ஸ்டெரா உற்பத்தியாளர்கள் தங்களது காற்று, நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் குறித்து இனி பொய்யுரைப்பது இல்லை என்றும் உறுதிகூறியுள்ளனர் என்று கூறிய ஆணையம் இதை மீறினால் அதன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
சிங்கப்பூர் குழாய்களில் வரும் தண்ணீர் நேரடியாகக் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று வந்த விளம்பரத்தை அடுத்து ஆணையம் தனது வர்த்தகத்தில் நியாயமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் சட்டங்களின்கீழ் விசாரணையைத் துவக்கியது.
இதன் தொடர்பில் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வலம் வந்த விளம்பரங்களில் தண்ணீரில் கிருமிகள், நுண்ணியிரிகள் போன்றவை இருப்பதாக சித்திரிக்கப்பட்டன.
அந்தக் கருவியின் ஆற்றல் குறித்து இன்ஸ்டகிராமில் வந்த விளம்பரத் தகவலை முனைவர் பட்டக் கல்வி பயிலும் ஒரு மாணவன் உண்மையல்ல என்று கூறியதை அடுத்து அது பற்றிய கூற்று பேசுபொருளானது.
அந்த விளம்பரத்தால் பொதுப் பயனீட்டுக் கழகம் உட்பட பல இடங்களிலிருந்து புகார்கள் வந்தததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அறிக்கை ஒன்றின் மூலம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30ஆம் தேதி) அன்று கருத்துரைத்த கழகம், தங்கள் பொருள்களை விற்பனை செய்வதற்காக தவறான, தகவல்கள் தருவோரை தான் சகித்துக்கொள்ளாது என்று கூறியது.

