முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி எனும் ரவி மாடசாமிக்கு நடந்த இறுதி அஞ்சலியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். வெள்ளிக்கிழமை (26 டிசம்பர்) ஈசூனில் உள்ள வீவக புளோக் 663ல் அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
25 ஆண்டுக்கும் மேல் வழக்கறிஞராகப் பணியாற்றிய திரு ரவி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறார்.
அத்துடன் மனித உரிமை வழக்குகளில் முன்னிலையாகி வாதாடியதாலும் இலவசச் சட்ட சேவைகளை வழங்கியதாலும் திரு ரவி பிரபலமாக இருந்தார்.
தொடக்கக்கல்லூரிக் காலத்தில் தமிழ், ஆங்கில மொழிப் பட்டிமன்றங்களில் புகழ்பெற்ற பேச்சாளராகவும் அவர் விளங்கினார்.
இறுதிச் சடங்கில் கலந்துகொண்டோர் திரு ரவியுடன் இருந்த தருணங்களை நினைவுகூர்ந்தனர். அவரது சகோதரியின் மகன் திரு குமரன் குணசேகரன், 39, மாமாவின் மறைவு குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகத் தெரிவித்தார்.
“நான் சிறு வயதில் இருந்தபோது என் மாமா சொந்தச் சட்ட நிறுவனத்தை நிறுவினார். அப்போது நான்தான் அவருக்கு உதவியாளராக இருந்தேன். மாமாதான் எனக்கு ஆங்கில மொழியையும் கற்றுத்தந்தார்,” என்று திரு குமரன் உணர்ச்சிபொங்கக் கூறினார்.
திரு ரவியின் நல்லுடலுக்கு மரியாதை செலுத்தச் சென்றோரில் சமையல் நிபுணர் தேவகி சண்முகமும் ஒருவர்.
“திரு ரவி நல்ல ஆளுமை கொண்டவர். அவர் பிரபலப் பாரம்பரிய உணவு வகைகள் மீது அதிக விருப்பம் கொண்டிருந்தார். இளம் வயதில் தொலைக்காட்சியில் அவரைப் பார்த்த ஞாபகம் எனக்கு உள்ளது. அவர் பேச்சாற்றல் மிக்கவர்.
தொடர்புடைய செய்திகள்
“நானும் ஈசூனில் வசிப்பதால் அவரது மறைவைப் பற்றி அறிந்துகொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தாமல் என்னால் எப்படி இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் திருவாட்டி தேவகி, 69.
திரு ரவியைச் சமூக ஊடகத் தளம் மூலம் அறிந்துகொண்டவர் திருவாட்டி பரிமளா கிருஷ்ணன், 56.
“அவரது மறைவு என்னை மிகவும் உலுக்கியது. எனக்கு அவரைத் தனிப்பட்ட முறையில் தெரியாமல் இருந்தாலும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்பினேன்.
“56 வயதில் அவர் காலமாவார் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை,” என்று கூறினார் திருவாட்டி பரிமளா.
மாலை 6.30 மணியளவில் மண்டாய் தகனச்சாலைக்குத் திரு ரவியின் நல்லுடல் எடுத்துச்செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன.

