ஹவ்காங் வீட்டு தீயில் உயிரிழந்த மூன்றாமவர் 56 வயதுப் பெண்

1 mins read
711f059d-ecce-41f2-aa86-52f511af0a2e
தீ விபத்து நிகழ்ந்த வீட்டுக்குள் இருந்து மறுநாள் ஏராளமான பொருள்களை நகரமன்ற ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹவ்காங்கில் இரு வாரங்களுக்கு முன்னால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்றாமவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

அவர் 56 வயது பெண்மணி என்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தீச்சம்பவத்தில் எந்தவொரு சதிநாசமும் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை திங்கட்கிழமை (ஜனவரி 27) தெரிவித்தது.

ஹவ்காங் ஸ்திரீட் 91 புளோக் 917ல் உள்ள வீட்டில் ஜனவரி 9ஆம் தேதி பிற்பகல் 12.40 மணியளவில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர்.

அவர்களில் திரு லீ சூன் கியக், 62, என்பவர் ஜனவரி 10ஆம் தேதியும் அவரது 18 வயது மகள் ஜனவரி 11ஆம் தேதியும் அடையாளம் காணப்பட்ட நிலையில், மூன்றாமவர் தற்போது அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

அவர் திரு லீயின் மனைவி திருவாட்டி சியோ சியூ சூ என்பவராக இருக்கலாம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கருதுகிறது.

திரு லீயும் திருவாட்டி சியோவும் 1992ஆம் ஆண்டு மணம் புரிந்ததாகவும் அவ்விருவரும் 2019ஆம் ஆண்டு அந்த வீட்டில் குடியேறியதாகவும் ஆவணங்கள் காட்டுகின்றன.

அந்த ஐந்தறை வீட்டில், தேவையில்லாத பொருள்களை அந்தக் குடும்பத்தினர் சேர்த்து வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.

அந்த வீட்டுக்குள் ஏராளமான பொருள்கள் குவிந்து கிடந்ததால் தீ விபத்து நிகழ்ந்தபோது தீயை அணைக்கச் சென்ற வீரர்கள் சவால்களை எதிர்நோக்கியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்