தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயிற்சியாளர்களுக்கு 300 இடங்களை ஒதுக்க நிதித் துறை நிறுவனங்கள் உறுதி

2 mins read
உள்ளகப் பயிற்சி மேற்கொள்ளும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும்
85c6f512-6cb1-4e7e-a306-d56f0b795c8d
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஜூலை 9ஆம் தேதி, வாழ்க்கைத் தொழில் சந்தை இடம்பெற்றது. - படம்: ஜே பி மோர்கன்

நிதிச் சேவை வழங்கும் நிறுவனங்கள், இத்துறையில் பணியாற்ற விரும்பும் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளை ஈர்க்கும் முயற்சிகளை மேம்படுத்தி வருகின்றன.

அடுத்த ஈராண்டுகளில் பயிற்சி, உள்ளகப் பயிற்சி மேற்கொள்வோருக்கு 300 இடங்களை ஒதுக்க 10 நிறுவனங்கள் உறுதிகூறியுள்ளன.

இதன் தொடர்பில் சிங்கப்பூரிலுள்ள வங்கி, நிதிச் சேவைக் கழகத்துடன் (ஐபிஎஃப்) அவை கைகோத்துள்ளன.

திறனாளர் குழுவை விரிவுபடுத்தவும் நிதித் துறையில் பணியாற்ற விரும்புவோர்க்குக் கூடுதலான பாதைகளை வழங்கவும் இந்த கூட்டு நடவடிக்கை உதவும்.

இந்தப் பத்து நிறுவனங்களுடன் மேலும் சில நிறுவனங்கள் புதன்கிழமை (ஜூலை 9) நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற ‘நிதித்துறை ஃபியெஸ்டா 2025’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டன.

‘ஐபிஎஃப்’, 12 நிதி நிறுவனங்கள், சிங்கப்பூரின் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் ஏறத்தாழ 800 பேரை ஈர்ப்பது இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

பல்கலைக்கழகங்களில் முழு நேரப் பட்டக் கல்வியில் சேர்வதற்கு அப்பால் நிதித் துறையில் பட்டதாரிகளின் வாழ்க்கைத் தொழிலுக்கான பல்வேறு பாதைகளை இந்த நிகழ்ச்சி எடுத்துரைத்தது.

எட்டு நிதிக் கல்விக்கழகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சுற்றுலாக்களுக்கு மாணவர்கள் பதிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. புக்கிட் தீமாவில் உள்ள ‘யுஓபி’ வங்கியின் பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்படும் ‘தேடல் வேட்டை’ நிகழ்ச்சியும் அவற்றில் அடங்கும்.

நிகழ்ச்சியில், ‘ஐபிஎஃப்’ கழகத்திற்கும் ‘யுஓபி’ வங்கிக்கும் மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதிய வேலை-கல்வித் திட்டங்களை உருவாக்கவும் ஏற்கெனவே நடப்பில் உள்ள அத்தகைய திட்டங்களை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள், வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டானிடம் நிதித் துறை வாய்ப்புகள் குறித்துக் கேள்வி எழுப்பினர்.

பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பயின்று தற்போது நிதித் துறையில் பணியாற்றுவோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்