சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வங்கி ஊழியர்கள் பொருத்தமற்ற திட்டங்களை வற்புறுத்தி விற்பதால், எளிதில் பாதிக்கப்படக்கூடிய வாடிக்கையாளர்கள் தவித்த நாள்கள் இனி முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.
ஏனெனில், ஆங்கிலம் அதிகம் தெரியாத முதியவர்கள், முதலீடு குறித்த புரிதல் குறைவான வாடிக்கையாளர்களைத் தங்கள் நிலையான வங்கி வைப்புத் தொகையைப் புதுப்பிக்க வங்கிக்கு அழைத்த பிறகு, அவர்களிடம் முதலீட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதை இந்த வழிகாட்டுதல்கள் திட்டவட்டமாகத் தடை செய்கின்றன.
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து முதலீட்டு விருப்பங்களைப் பற்றி கேட்டாலொழிய, நிலையான வங்கி வைப்புத் தொகையைப் புதுப்பிக்க வங்கிக் கிளைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மற்ற திட்டங்களை வங்கிகள் தீவிரமாக விளம்பரப்படுத்தக் கூடாது என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.
ஓய்வூதியதாரர்கள், சுயதொழில் செய்பவர்கள், தற்காலிக ஊழியர்கள் ஆகியோருக்கு முதலீட்டுத் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட கடன்களை வழங்குவதற்கு முன்பு வங்கி ஊழியர்கள் நன்கு சிந்திக்க வேண்டும். ஏனெனில், அத்திட்டங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்தால், அத்தகைய வாடிக்கையாளர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகலாம்.
“முதலீட்டுத் திட்டம் அல்லது கடன் வாடிக்கையாளருக்குப் பொருத்தமற்றது எனப் பின்னர் கண்டறியப்பட்டால், நிதி நிறுவனம் அதற்கான தகுந்த சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதில் பரிவர்த்தனையை ரத்து செய்து வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திரும்ப அளிப்பதும் அடங்கும்,” என்று ஆணையம் கூறியது.
வாடிக்கையாளர்கள் கடன்களைப் பெற தாமாக முன்வந்தாலும், அதனால் ஏற்படக்கூடிய மிக மோசமான இழப்புகள் குறித்தும் முதலீட்டிலிருந்து பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது குறித்தும் அவர்களுக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டும்.

