ஊழியர்களின் மத்திய சேமநிதி குறித்த விவரங்களை யாரேனும் மத்திய சேமநிதிக் கழகத்திலிருந்து (மசேநி) அழைப்பதாகக் கூறி முதலாளிகளிடம் கோரிக்கை விடுத்தால் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவேண்டும்.
குற்றக் கும்பலைச் சேர்ந்தோர், தங்களை மசேநி கழகத்தின் அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு விசாரணை நடத்துவதாகவும் தனிப்பட்ட விவரங்களை மறுஆய்வுச் சோதனைகள் செய்வதாகவும் கூறி ஆள்மாறாட்ட மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மசேநி கழகம் முதலாளிகளுக்கு எச்சரிக்கை அறிக்கைகளை மின்னஞ்சல் வழியாகப் புதன்கிழமை (ஜூலை 15) அனுப்பிவைத்துள்ளது.
ஊழியர்களின் விவரங்களைக் கேட்டு மசேநி கழகத்தின் அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொள்வோரை நிராகரிக்கும்படி அது கேட்டுக்கொண்டது.
ஊதியம் செலுத்தியதற்கான ஆதாரங்கள், ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள், மசேநி சேமிப்புக் கணக்குகள் குறித்த ஆவணங்கள் போன்றவற்றை மோசடிக்காரர்களிடம் பகிரவேண்டாம் என்று கழகம் தெரிவித்தது.
அவ்வகையான கோரிக்கைகள் வாட்ஸ்அப் அல்லது இதர சமூக ஊடகங்கள், செயலிகள், அதிகாரபூர்வமற்ற மின்னஞ்சல்கள் வழியாகக் கேட்கப்படலாம் எனவும் கழகம் குறிப்பிட்டது.
முதலாளிகளும் மனிதவள நிபுணர்களும் இதுபோன்ற சந்தேகம் எழுப்பும் கோரிக்கைளை ஆராய்ந்து நிதானமாகச் செயலாற்ற வேண்டும் என்று கழகம் அறிவுரை வழங்கியது.
உதவி தேவைப்படுவோர், ‘ஸ்கேம்ஷீல்ட்’ எனப்படும் 24 மணிநேரமும் செயல்படும் அமைப்பை 1799 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் அல்லது மத்திய சேமநிதிக் கழகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.
அதிகாரபூர்வமற்ற செய்திப் பகிர்வுத் தளங்களில் கழகம் யாரையும் தொடர்புகொள்வதில்லை என்று அது உறுதிப்படுத்தியது.
கழகம் அனுப்பும் மின்னஞ்சல்களின் அனுப்புநர் முகவரியின் முடிவில் “@cpf.gov.sg” அல்லது “@e.cpf.gov.sg” என்றே இருக்கும்.
கழகத்திடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் 62271188 என்ற எண்ணில் இருந்து வரும். குறுஞ்செய்திகள் “gov.sg” என்ற அனுப்புநர் முகவரியுடன் அமையும்.

