மணமாகாத தாயாருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் நிதியாதரவு

எஸ்ஜி குழந்தை ஆதரவுத் தொகுப்புத் திட்டம்

மணமாகாத தாயாருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் நிதியாதரவு

2 mins read
1a6b6fe3-4d49-4868-80fa-52adb9a03dd1
ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய தினப் பேரணி உரையின்போது புதிய எஸ்ஜி குழந்தை ஆதரவுத் தொகுப்புத் திட்டம் குறித்துப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்திருந்தார். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புதிய எஸ்ஜி குழந்தை ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதி ஆதரவு, திருமண உறவுக்குள் நுழையுமுன்பே பெற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.

திருமண உறவிற்கு வெளியே பிறந்த குழந்தைகள், இதற்கு முன்பு மகப்பேறு தொடர்பான சில நிதி ஆதரவுகளைப் பெற தகுதிபெறாத நிலையில், இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

இம்மாதம் 23ஆம் தேதி தேசிய தினப் பேரணி உரையின்போது இந்தப் புதிய தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார். அத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு சிங்கப்பூர் குழந்தைக்கும் $62,000 வரை வழங்கப்படும்.

குழந்தை அன்பளிப்பாக $10,000, ஒரு குழந்தை 16 வயதை எட்டும் வரையில் ஆண்டுதோறும் $2,000 உள்ளிட்டவையும் அத்திட்டத்தில் அடங்கும்.

கடந்த 2020-2024 காலகட்டத்தில் ஆண்டுதோறும் திருமண உறவுக்கு வெளியே சராசரியாக 745 குழந்தைகள் பிறந்தன. அதாவது, குழந்தையைப் பெற்றபோது அதன் தாய், அதன் தந்தையை மணமுடித்திருக்கவில்லை.

இந்த அறிவிப்பானது, தாங்கள் எந்தச் சூழலில் பிறந்தோம் என்ற அடிப்படையில் அல்லாமல், எல்லாக் குழந்தைகளுக்கும் ஆதரவு என்ற அடிப்படையில் வழங்கப்படுவதைக் கவனிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.

சிங்கப்பூர் குடிமக்களாகப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆதரளிப்பதே இதன் முதன்மை நோக்கம் என தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

இருப்பினும், திருமண உறவிற்குள் குழந்தை் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் நீண்டகாலக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பாரம்பரியக் குடும்ப அமைப்பே நாட்டின் சமூக நெறியாகத் தொடர்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தற்போது முதலாவது, இரண்டாவது குழந்தைக்கு $11,000 குழந்தை போனஸ் வழங்கப்படும் நிலையில், திருமணமாகாத தாய்மார்களுக்கு அது வழங்கப்படுவதில்லை. அதேபோல, சிங்கப்பூர்க் குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு வழங்கப்படும் ‘வேலைசெய்யும் தாய்மாருக்கான குழந்தை வரிவிலக்கு’ சலுகையைப் பெறவும் அவர்கள் தகுதிபெறுவதில்லை.

திருமண உறவிற்குள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவ்விரு திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவ்வகையில் குழந்தை பெற்றுக்கொள்ளாத பெற்றோர் அவற்றின்கீழ் பயன்பெறத் தகுதிபெறுவதில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், குழந்தையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஆதரவளிக்கும் வகையில், விடுப்பு, குழந்தைப் பராமரிப்பு, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு போன்றவை தொடர்பான சலுகைகளுக்கு அவர்கள் தகுதிபெறுகின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கான $5,000 மெடிசேவ் மானியம், குழந்தை மேம்பாட்டுக் கணக்கு போன்ற ஆதரவுகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்
குழந்தைகுழந்தை போனஸ்ஆதரவுதிருமணம்