வடகொரியாவுக்குப் பொருள்களை அனுப்ப உதவிய பெண் நிர்வாகிக்கு அபராதம்

வடகொரியாவுக்குப் பொருள்களை அனுப்ப உதவிய பெண் நிர்வாகிக்கு அபராதம்

2 mins read
37b1deed-5796-441e-81b4-624dfc7995b6
அபராதம் விதிக்கப்பட்ட பெண். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடகொரியாவுக்குப் பொருள்களை அனுப்ப உதவிய சிங்கப்பூர் பெண்ணுக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கோ போ சூ, 57, எனப்படும் அவர் ‘ஸ்கைலைன் ஷிப்பிங்’ என்னும் சரக்குகளை அனுப்பி வைக்கும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்தார்.

அப்போது, வடகொரியாவில் உள்ள ஒருவருக்கு ஆடம்பரப் பொருள்களை விநியோகிக்க எலுவா இண்டர்நேஷனல் என்னும் மற்றொரு நிறுவனத்துக்கு அந்தப் பெண் உதவி புரிந்தார்.

அந்த நிறுவனம் $600,000 மதிப்புள்ள மதுபானம், பொக்கா பானம் மற்றும் நெஸ்கஃபே காப்பியை அனுப்ப அவர் உதவி செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துலக வர்த்தகத் தடை விதிக்கப்பட்டு உள்ள வடகொரியாவுடன் சிங்கப்பூரில் இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ வர்த்தகம் புரிவதும் பொருள்களை அனுப்புவதும் குற்றமாகும்.

அந்தத் தடை பற்றி அறிந்திருந்தும் கோ, கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் வடகொரியாவுக்கு பான வகைகளை அனுப்ப உதவி செய்ததாகக் கூறப்பட்டது.

‘எலுவா இண்டர்நேஷனல்’ நிறுவனத்தின் சரக்குகளை கப்பல் அனுப்பி வைப்பதற்காகப் பணி அமர்த்தப்பட்ட ‘ஸ்கைலைன் ஷிப்பிங்’ மூலம் வடகொரியாவுக்கு மதுபானங்களும் மென்பானங்களும் அனுப்பப்பட்டன.

பொருள்கள் சென்று சேர வேண்டிய இடத்தின் பெயரில் வடகொரியா என்று குறிப்பிட வேண்டாம் என்று எலுவா நிறுவன முதலாளிக்கு கோ ஆலோசனை கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆறுமாத காலத்தில் அந்தப் பெண் இதேபோன்று ஐந்து முறை கப்பலில் பொருள்களை அனுப்ப உதவியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இருப்பினும், கோ தனது உதவிக்காக பலன் பெற்றதற்கான சான்று எதுவும் இல்லை என்றார் அவர்.

பொருள்களை வடகொரியாவுக்கு அனுப்பிய எலுவா இண்டர்நேஷனல் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்கிறது.

ஐக்கிய நாடுகள் மன்றம் விதித்த தடைகளை மீறுபவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு பத்தாண்டு வரையிலான சிறையும் $500,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்