மரின் பரேடில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் வெதுவெதுப்பான நீரை 71 வயதான இயோ காவ் குக் அண்டை வீட்டாரான திரு கோ டோக் லியாங் மீது ஊற்றினார். இதனால் அவருக்கு இலேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.
இந்தக் குற்றத்திற்காக இயோவுக்கு $3000 அபராதம் திங்கட்கிழமை விதிக்கப்பட்டது.
மற்றொரு சந்தர்ப்பத்தில், திரு கோவுக்குச் சாபமிட்டு அவரைத் துடைப்பத்தால் இயோ அடித்தார் எனக் கூறப்பட்டது.
வேண்டுமென்றே அண்டை வீட்டாரைத் தாக்கி காயம் விளைவித்த இரு குற்றச்சாட்டுகளை இயோ ஒப்புக்கொண்டார்.
இயோமீது சுமத்தப்பட்ட வேறு இரு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கும்போது கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.
இச்சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி நடந்தது.
அன்று இரவு 9 மணியளவில் திரு கோ, தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தன் வீட்டுக்கு முன் இயோ ஜாஸ் குச்சிகளை வீசி எறிந்ததை திரு கோ கண்டார்.
இது குறித்து அவர் இயோவிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இயோ தனது சமையல் அறையில் இருந்த இளஞ்சூடான நீரை எடுத்து வந்து திரு கோ மீது ஊற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் அவரது கழுத்து, மார்பு, கன்னம் ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது.
இது குறித்துக் காவல்துறைக்கு உடனடியாக திரு கோ தகவல் தெரிவித்தார்.


