சிங்கப்பூரில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தத் தவறும் லாரி உரிமையாளர்களுக்கு இன்னும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறையின்கீழ் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை லாரிகள் பொருத்தத் தவறும் உரிமையாளர்களுக்கு முதல்முறை அதிகபட்சமாக $10,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
அதே குற்றத்திற்காக இரண்டாவது முறை பிடிபடுவோருக்கு அதிகபட்சம் $20,000 வரை அபராதம் விதிக்கப்படும். இவை தற்போதுள்ள அபராதங்களைவிட பத்து மடங்கு அதிகம்.
தற்போதைய சட்டத்தின்கீழ் முதல் முறை பிடிபடுவோருக்கு $1,000யும் இரண்டாவது முறை பிடிபடுவோருக்கு $2,000யும் அபராதம் விதிக்கப்படுகிறது.
பெரிய வாகனங்களால் ஏற்படக்கூடிய சாலை விபத்துகளை அடிப்படையாகக் கொண்டு அபராதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை வேகக் கட்டுப்பாட்டை மீறிய ஆறு கனரக வாகன ஓட்டுநர்கள்மீது டிசம்பர் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்களில் சிலர் பேருந்துகளையும் சிலர் சிமெண்ட் கலவை கனரக வாகனங்களையும் ஓட்டியவர்கள். அவர்கள் ஓட்டிய வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்படவில்லை.
மணிக்கு 15 கிலோமீட்டரிலிருந்து 24 கிலோமீட்டருக்குள் இருக்கவேண்டிய வேகக் கட்டுப்பாட்டை ஓட்டுநர்கள் மீறியிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிலப் போக்குவரத்து, அது தொடர்பான விவகாரங்கள் மசோதாவில் கடுமையான அபராதங்களைத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் திங்கட்கிழமை (ஜனவரி 12) நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். அந்த மசோதா குறித்து பிப்ரவரி அமர்வின்போது விவாதிக்கப்படும்.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை மாற்ற முயல்வோருக்கும் புதிய அபராதம் விதிக்கப்படுவதை மசோதா முன்வைக்கிறது.

