தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேருந்தில் மற்ற பயணிகளுக்குத் தொல்லை தருவோர்க்கு அபராதம்

1 mins read
62985fe0-d46d-4174-ad2d-b509456ec85e
புதிய சட்டம் பொதுப் பேருந்துகளிலும் பேருந்துச் சந்திப்புகளிலும் பயணிகளிடம் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும். - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேருந்தில் மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு அளிக்கும் விதத்தில் சமூக அக்கறையின்றி நடந்துகொள்வோர்க்கு அபராதம் விதிப்பதற்கு வகைசெய்யும் புதிய மசோதா செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 14) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பொதுப் பேருந்துகளிலும் பேருந்துச் சந்திப்புகளிலும் பயணிகளின் நடத்தையை ஒழுங்குபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்தார்.

மேலும், விதிமுறைகளை மீறுபவர்களின் நடத்தை மற்ற பயணிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கேற்ப தண்டனையின் தீவிரம் இருக்கும் என்றும் தொடர்ந்து அச்செயலைச் செய்பவருக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் புதிய சட்டத்திற்கான விதிமுறைகள் பின்னர் கட்டமைக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை (பலவகைப்பட்ட திருத்தங்கள்) மசோதா மீதான விவாதத்தின்போது திரு முரளி பிள்ளை குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம், அப்போதைய போக்குவரத்து மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், ரயில் போக்குவரத்தைவிட பேருந்துகளில் பயணிகளின் நடத்தையைக் கண்காணிக்க அரசாங்கத்திற்குக் குறைவான அதிகாரமே உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், பேருந்து, ரயில்களில் சமூக அக்கறையின்றி செயல்படுபவர்களின் நடத்தைக்கு எதிரான ஒழுங்குமுறை கட்டமைப்பு 2026ஆம் ஆண்டுக்குள் சீரமைக்கப்படும் என்றார் அவர்.

இந்தப் புதிய சட்டம் பொதுப் பேருந்துகளிலும் பேருந்துச் சந்திப்புகளிலும் பயணிகளிடம் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும்.

சோதனைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் பயணிகளுக்கு $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்