எவரும் கவனிக்காத கொசுவத்தியினால் மார்ச் 1ஆம் தேதி பீஷானில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் தீச்சம்பவம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த புளோக்கில் இருந்து கிட்டத்தட்ட 40 பேர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை அன்று பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு பீஷான் ஸ்திரீட் 13ல் உள்ள புளோக் 176ல் தீ ஏற்பட்டதாக தனக்குத் தகவல் கிடைத்தது எனத் தெரிவித்தது.
அந்த புளோக்கில் இருந்த ஐந்தாம் மாடி வீடு ஒன்றின் படுக்கை அறை, கூடம் ஆகியவை தீயில் முழ்கியிருந்ததாக அது கூறியது.
இதில் காணொளி ஒன்றில் வெளியான பதிவில் குறைந்தது ஆறு வீடுகள் பாதிக்கப்பட்டதைக் காட்டியது. அந்த புளோக்கின் ஐந்தாம் மாடியில் இருந்து கறும்புகை வெளியானதும் அது வீட்டின் வெளியே இருந்த குளிரூட்டிகளுக்கும் பரவியதையும் காணமுடிந்தது.
தீ பரவியதை அடுத்து கட்டடத்தில் தீயால் கருகிய பகுதிகள் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது
குடிமைத் தற்காப்புப் படை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபோது ஐந்தாம் மாடிக்கு மேலேயுள்ள சில வீடுகளும் வெப்பம், தீப்புகை போன்றவற்றால் பாதிப்படைந்ததாக கூறப்படுகிறது.
தீயால் பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து நான்கு பேர் குடிமைத் தற்காப்புப் படையினர் வரும் முன் அங்கிருந்து ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தீ காரணமாக கிட்டத்தட்ட 40 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை விளக்கியது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அது சொன்னது.

