அங் மோ கியோ அவென்யூ 8, புளோக் 510ல் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) நடந்த தீச்சம்பவம் தொடர்பில் இரு பதின்மவயதினர் குறும்புச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தனர்.
அந்த இரண்டு 16 வயது இளையர்களும் சனிக்கிழமை (செப்டம்பர் 27) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். இருவர் மீதும் குறும்புச் செயல் மூலம் தீ வைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் புரிந்த இருவரும் 18 வயதுக்குக் குறைவானவர்களாக இருப்பதால் சிறார், இளையர் சட்டத்தின்கீழ் அவர்களது பெயர்களை வெளியிட முடியாது. காணொளி இணைப்புவழி இருவரும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்டனர்.
சம்பவம் நடந்த நாளன்று இரவு 8.20 மணியளவில், அடுக்குமாடிக் கட்டடத்தின் ஏழாவது மாடியின் மின்தூக்கித் தளத்தின் அருகே விட்டுச்செல்லப்பட்ட மெத்திருக்கை ஒன்றை இருவரும் ‘லைட்டர்’ என்ற கருவியைக் கொண்டு தீ மூட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அரசு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு மூன்று வாரங்கள் தேவை என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர். கால்களில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் அவரவர் தாயாரின் முன்னிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறும்புச் செயலால் தீ மூட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு அபராதத்துடன் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
வழக்கு அக்டோபர் 17ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.