அங் மோ கியோ புளோக் ஒன்றில் தீ மூண்டதால் நால்வர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
செவ்வாய்க் கிழமை (நவம்பர் 4) நிகழ்ந்த சம்பவத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அங் மோ கியோ அவென்யூ 4, புளோக் 641ல் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்து காலை 11.45 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நவம்பர் 5ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
இதில் பாதிக்கப்பட்ட நான்கு பேரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகையை சுவாசித்ததால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பிடுவதற்காக மருத்துவமவனையில் சேர்க்கப்பட்டனர் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
புளோக்கின் எட்டாவது மாடியில் மின்தூக்கிக்கு அருகே வைக்கப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் தீ ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தீ அணைப்பாளர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.

