பாலஸ்டியர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; எவருக்கும் காயமில்லை

பாலஸ்டியர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; எவருக்கும் காயமில்லை

1 mins read
8c298ffa-da91-4063-8c9f-e046c7e39985
தீப்பற்றிய படுக்கையறையின் சன்னல் பகுதி கருகிய நிலையில் இருந்தது. - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2
Google News Preferred Icon

பாலஸ்டியர் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் படுக்கையறையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) இரவு தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

அன்று இரவு 9.15 மணியளவில் 2 ஏவா சாலையில் உள்ள விக்டரி பாயிண்ட் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்தபோது, நான்காவது மாடியில் உள்ள வீட்டின் படுக்கையறை ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக நீர் பீச்சியடித்து தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

சீன மொழி நாளிதழான சாவ்பாவ் வெளியிட்ட தகவலின்படி, சம்பவ இடத்திலிருந்து 70க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீப்பற்றிய அந்த வீடு கப்பல் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களுக்கான தங்கும் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தீ விபத்தின்போது கட்டடத்தின் சன்னல் வழியே அடர்ந்த கரும்புகை வெளியேறியது.

தீ அணைக்கப்பட்டிருந்த நிலையிலும் இரவு 10 மணி அளவில் அப்பகுதியில் தீப்பற்றி எரிந்த நெடி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தீப்பற்றிய படுக்கையறையின் சன்னல் பகுதி கருகிய நிலையில் இருந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் குறைந்தது ஐந்து குடிமைத் தற்காப்புப் படை வாகனங்களும் மூன்று காவல்துறை வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

இடத்தைச் சுற்றி அதிகாரிகள் தடுப்பு போட்டிருந்தனர். அப்பகுதிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
தீகட்டடம்சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை