புவாங்கோக் கிரசென்ட்டில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) அதிகாலையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதியவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
புவாங்கோக் கிரசென்ட்டின் 979பி புளோக்கில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து நள்ளிரவு 12.25 மணி அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டின் படுக்கையறையில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. தண்ணீர்க் குழாயைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.
ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் லாய் ஆகஸ்ட் 20ஆம் தேதி பிற்பகல் 1 மணி அளவில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், கால்களில் ஏற்பட்ட வெட்டுக் காயங்கள் காரணமாக முதியவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
“அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார்,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமது பதிவில், பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்த குடியிருப்பாளர்களுக்கு உதவிய தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் ஒருவருக்கும் திரு விக்டர் லாய் நன்றி தெரிவித்துக்கொண்டார்.


