சைனாடவுனிலுள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்பிளெக்ஸின் குடியிருப்புக் கட்டடத்திலுள்ள 21வது மாடி வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) தீ மூண்டதில் அங்கிருந்து 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.
1 பார்க் ரோட்டில் தீச்சம்பவம் நேர்ந்தது பற்றிய தகவல் பிற்பகல் 1.55 மணிக்குக் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.
நீரைப் பீய்ச்சியடிக்கும் கருவிகளைக் கொண்டு தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைத்ததாகவும் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
சம்பவம் நேர்ந்தபோது வீட்டில் எவரும் இல்லை. எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. தீச்சம்பவத்திற்கான காரணம் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.
வீடு ஒன்றிலிருந்து புகை வெளிவருவதைக் காண்பிக்கும் சில படங்கள் ‘சியாவ்ஹோங்ஷூ’ சமூக ஊடகத் தளத்தில் வலம்வருகின்றன.
குறைந்தது மூன்று தீயணைப்பு வாகனங்களும் ஒன்பது காவல்துறை வாகனங்களும் அந்தப் படங்களில் தென்பட்டன.
வீட்டைவிட்டுப் போவதற்கு முன்னதாக மெழுகுவர்த்திகள் போன்ற எரியூட்டப்பட்ட பொருள்களின் நெருப்பை அணைக்கும்படி குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.
சமையலைப் பாதியில் விட்டுச் செல்வதோ மின்சாரத்தை நிறுத்தாமல் வீட்டிலிருந்து வெளியேறுவதோ ஆபத்தானது என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2024ல் குடிமைத் தற்காப்புப் படைக்குச் செய்யப்பட்ட அழைப்புகளில் 968 அழைப்புகள் குடியிருப்புகளில் ஏற்படும் தீச்சம்பவங்களுடன் தொடர்புடையவை என்று குடிமைத் தற்காப்புப் படையின் ஆண்டறிக்கைப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தத் தீச்சம்பவங்களில் 299, மின்சாரத்துடன் தொடர்புடையவை என்றும் 335, கவனமின்றி நடுவே விட்டுச் சென்ற சமையலால் ஏற்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை இரண்டுமே, வீடுகளில் தீச்சம்பவங்கள் ஏற்படுவதற்கான தலையாய காரணங்கள்.
2023ஐக் காட்டிலும் 2024ல் 8.3 விழுக்காடு அதிக எண்ணிக்கையில் மின்சாரத் தீ விபத்துகள் நேர்ந்துள்ளன.

