சின் மிங் பட்டறையில் இருந்த மின்வாகனத்தில் தீ

சின் மிங் பட்டறையில் இருந்த மின்வாகனத்தில் தீ

படம்: எஸ்ஜிஆர்வி

20 Nov 2026 - 12:16 pm

1 mins read

சின் மிங் தொழிற்சாலைக் கட்டத்தில் உள்ள பட்டறை ஒன்றில் மின்வாகனத்தின் மின்கலன் தீப்பற்றிக்கொண்டதை அடுத்து வியாழக்கிழமை (நவம்பர் 19) இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

160 சிங் மிங் டிரைவில் மூண்ட தீ குறித்துப் பிற்பகல் 1.30 மணியளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

ஐந்தாவது மாடியில் இருந்த பட்டறையில் மூண்ட தீயை இரண்டு குழாய்களில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

புகையைச் சுவாசித்ததற்காக இரண்டு பேர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.

நவம்பர் 19ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட காணொளியில் பட்டறை ஒன்றிலிருந்து வெடிப்புச் சத்தத்துடன் தீப்பொறிகள் பறப்பதைக் காண முடிகிறது.

அதே காணொளியில் உயர்த்தப்பட்ட கார் ஒன்றிலிருந்து தீப்பிழம்புகளைக் காண முடிகிறது. தீ பெரிதானபோது அடுத்தடுத்து வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

தீ மூண்ட பகுதியிலிருந்த பொருள்களை நால்வர் அவசர அவசரமாக நகர்த்தினர்.

சிறிது நேரத்தில் வெடிப்புச் சத்தம் அடங்கிய பிறகும் தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது.

தீப்பிடித்த கார் போர்‌ஷே டாய்கென் என்று அடையாளம் கண்ட லியன்ஹ சாவ்பாவ் நாளேடு, மாலை 4 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

சாவ்பாவ் செய்தியாளர் சம்பவ இடத்தில் தீயணைப்பாளர்களைக் கண்டதாகக் குறிப்பிட்டார்.

குறைந்தது இரண்டு தீயணைப்பு வாகனங்களும் அங்குக் காணப்பட்டன.

தீச்சபவத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்