தோ பாயோ தீவிபத்தின்போது தண்ணீர் விநியோகப் பிரச்சினை எழுந்ததற்கு நிலத்தடி நீர்க்குழாய் கசிவு காரணமாக இருக்கலாம் என்று பீஷான் - தோ பாயோ நகர மன்றம் தெரிவித்து உள்ளது.
ஜூலை 29ஆம் தேதி தோ பாயோ லோரோங் 8, புளோக் 229ல் அந்தத் தீவிபத்து ஏற்பட்டது.
அந்த புளோக்கின் 10வது தளத்தில் உள்ள ஒரு குடியிருப்பு முழுவதுமாக எரிந்ததுடன், 11வது தளத்தில் உள்ள ஒரு குடியிருப்புக்கும் பரவியது.
தீயணைப்பு வீரர் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தீ விபத்து தொடர்பாக வியாழக்கிழமை (ஜூலை 31) அறிக்கை வெளியிட்ட நகர மன்றம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருடன் இணைந்து சம்பவ இடத்தில் உள்ள தீயணைப்புக் குழாயைச் சோதித்ததாக அதில் தெரிவித்து உள்ளது.
“சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் ஆலோசித்ததில், தீயணைப்புக் குழாயில் நீர் விநியோகம் தடைபட்டதற்கு நிலத்தடி நீர்க்குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கு முன்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அந்தத் தீயணைப்புக் குழாயை அதிகாரபூர்வ தீயணைப்பு மற்றும் தீத் தடுப்பு முறைக்கான குத்தகையாளர் சோதித்துப் பார்த்ததாகவும் அப்போது அது நல்லநிலையில் இருந்ததாகவும் நகர மன்றம் கூறியுள்ளது.
அடுத்தகட்ட சோதனையை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தீயணைப்புக் குழாய் என்பது ஒரு கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள செங்குத்தான சிவப்புக் குழாயாகும். இது, பொதுவாகப் பயன்பாட்டில் இல்லாதபோது உலர்ந்திருக்கும்.
தீ விபத்தின்போது, இது தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீருடன் இணைக்கப்பட்டு, கட்டடத்தின் மேல் தளங்களுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல உதவுகிறது.