மெக்பர்சன் பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
அச்சம்பவத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கட்டடத்திலிருந்து ஏறக்குறைய 80 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
சர்க்கிட் சாலையில் அமைந்துள்ள புளோக் 39ல் அதிகாலை 2.05 மணியளவில் தீப்பற்றியதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பாளர்கள், ஒன்பதாவது தளத்தில் உள்ள வீட்டின் வரவேற்பறை அடர்ந்த கரும்புகையுடன் எரிவதைக் கண்டனர்.
பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை விரைவாக அணைத்தனர்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை மீட்ட தீயணைப்பாளர்கள், அவருக்கு உடனடியாக இதய இயக்க மீட்பு சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அவர் நினைவிழந்த நிலையில் சாங்கிப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் உறுதிப்படுத்தின.
தீச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

