ரேஸ் கோர்ஸ் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) அதிகாலை 2.15 மணிக்கு லாரி ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்தது.
அச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியபோதிலும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
லாரியின் இயந்திரப் பகுதியில் மூண்ட தீயைக் குழாய்கள் மூலம் நீரைப் பீய்ச்சி அடித்து அணைத்ததாக அது கூறியது.
ரேஸ் கோர்ஸ் ரோட்டில் புளாக் 684ல் வசிக்கும் 33 வயது குடியிருப்பாளரான திரு வோங், அதிகாலை 2.24 மணியளவில் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து அவசரகால வாகனங்களின் எச்சரிக்கை ஒலியையும் கார்களின் ஒலிப்பான்களையும் கேட்டதாகவும் தெரிவித்தார்.
நான் எனது வீட்டுச் சன்னல் வழியாக வெளியே பார்த்தபோது, லாரி தீப்பிடித்து எரிவதைக் கண்டேன் என்றார் அவர்.
அந்த நேரத்தில் எரியும் வாகனத்தின் அருகில் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் வசித்த புளோக்கில் மற்றொரு தீச்சம்பவம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 3.11 மணியளவில், கருகிய நிலையில் இருந்த அந்த லாரியை தாம் கண்டதாக திரு வோங் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
