தெம்பனிஸ் வட்டாரத்தின் தொழிற்பேட்டைக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (மே 9) மூண்ட தீயை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
18 தெம்பனிஸ் ஸ்திரீட் 92ல் உள்ள மூன்று மாடி தொழிற்பேட்டைக் கட்டடத்தில் தீ மூண்டது குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குப் பிற்பகல் 12.50 மணி வாக்கில் தகவல் கிடைத்தது.
கட்டடத்துக்கு அருகில் இருந்த ஊழியர்கள் அலுவலகத்தைவிட்டு வெளியேறினர், அருகில் இருந்த மிடல்ட்டன் அனைத்துலகப் பள்ளி வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கட்டடத்தில் இருந்த துணிமணிப் பொருள்கள் தீச் சம்பவத்துக்குக் காரணம் என்ற சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், ஐந்து குழாய்களில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பிற்பகல் 2.30 மணியளவில் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கட்டடத்துக்கு அருகே காணப்பட்டன.
“தீ கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் கட்டடம் நிலையாக இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
டி.சி. ஹோம்பிளஸ் என்ற நிறுவனம் மட்டும் கட்டடத்தைப் பயன்படுத்துகிறது என்று அதன் இயக்குநர் யப் கியட் பூன் தெரிவித்தார்.
“தீ மூண்டபோது ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அது பெரிதாகிவிட்டது,” என்றார் திரு யப்.
மிடல்ட்டன் பள்ளியை நிர்வகிக்கும் இட்டன் ஹவுஸ் பேச்சாளர், மாணவர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகப் பகிர்ந்துகொண்டார். பிற்பகல் 2.45 மணியளவில் கட்டடத்திலிருந்து எழும்பிய கரும்புகை கலைந்தது. கையில் லேசான காயம் ஏற்பட்டவர் தம்மை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறியதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.