ஜூரோங் ஈஸ்ட் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) அதிகாலை ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்; அந்தப் பகுதியிலிருந்து 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் உள்ள புளோக் 339ல் நடந்த அந்தத் தீச்சம்பவம் குறித்து அதிகாலை 3.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.
குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது, மூன்றாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறிக்கொண்டிருந்தது. அந்த வீட்டின் வரவேற்பறையில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது, வரவேற்பறையில் சுயநினைவிழந்த நிலையில் ஒருவர் இருந்ததைக் கண்டனர்.
அவரின் மரணத்தைச் சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிசெய்தார். தீச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மேல்விவரங்களுக்காக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளது.
கடந்த ஜூலை 28ஆம் தேதிக்குப் பிறகு, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் தீ விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட நான்காவது சம்பவம் இது.
ஜூலை 28ஆம் தேதி காலையில் சர்க்கிட் ரோடு, புளோக் 39ல் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில், 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜூலை 31ஆம் தேதி, கிளமெண்டி அவென்யூ 4ல் உள்ள புளோக் 309ன் எட்டாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில், 65 வயது முதியவர் உயிரிழந்தார்; இரண்டு தீயணைப்பாளர்கள் காயமடைந்தனர்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி, ரேஸ் கோர்ஸ் ரோடு, புளோக் 684ன் ஐந்தாம் தளத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீயில், 55 முதல் 88 வயதிற்குட்பட்ட ஐந்துப் பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் 88 வயது முதியவர் ஆகஸ்ட் 5ஆம் தேதி உயிரிழந்தார்.


