லிட்டில் இந்தியாவில் ரோவெல் ரோட்டிலுள்ள உணவகம் ஒன்றில் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) பிற்பகலில் தீ மூண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
1ஏ ரோவெல் ரோட்டிலுள்ள ‘கானா பாஸ்மதி’ (Khana Basmati) உணவகத்தில் தீ விபத்து நேர்ந்ததாகச் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் காட்டுகின்றன.
கடையிலிருந்து வெளியேறும் புகை தெருவில் பரவியதை, முஹைசின் முன்ஷி என்ற ஃபேஸ்புக் பயனர் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வெளியிட்ட நேரலைக் காணொளி காட்டியது.
கடைவீட்டின் பின்புறம் உள்ள புகைபோக்கி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தபோது, பொருள்களைக் கையில் தூக்கிக்கொண்டு ஊழியர்கள் சிலர் வெளியேறியதையும், சீருடை அணிந்த அதிகாரிகள் சிலர் தீயணைப்பான்களுடன் கடைக்குள் நுழைந்ததையும் காணொளியில் காண முடிந்தது.
மதிய உணவு உண்பதற்காகப் பிற்பகல் 1 மணியளவில் ரோவெல் ரோட்டின் வழியாகச் சென்றுகொண்டிருந்த முஹைசின் முன்ஷி, அந்த இருமாடிக் கடைவீடு தீப்பற்றி எரிவதைக் கண்டதாகத் தமிழ் முரசிடம் கூறினார்.
ஃபேஸ்புக் நேரலைக் காணொளி வழியாகத் திரு முன்ஷி, சம்பவ இடத்தில் நடந்தவற்றை வங்காள மொழியில் விவரித்தார்.
கட்டுமான ஊழியராகப் பணியாற்றும் பங்ளாதேஷ் நாட்டவரான 40 வயது முன்ஷி, தாம் அங்குச் சென்று கிட்டத்தட்ட 10 நிமிடங்களில் மழை தூறத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.
எவரும் காயமடைந்ததைக் காணவில்லை என முன்ஷி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“தீயணைப்பாளர்கள் விரைந்து வந்தனர். சம்பவ இடத்தைச் சுற்றி அதிகாரிகள் தடுப்புகளை வைத்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 19ஆம் தேதி பிற்பகல் 1.25 மணியளவில், 1 ரோவெல் ரோட்டில் நிகழ்ந்த தீச்சம்பவம் பற்றிய தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
உணவகத்தின் சமையலறையில் இருந்த பொருள்களில் தீ பற்றியதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.
தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

