லிட்டில் இந்தியா கடைவீட்டில் தீ விபத்து; 25 பேர் வெளியேற்றம்

லிட்டில் இந்தியா கடைவீட்டில் தீ விபத்து; 25 பேர் வெளியேற்றம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Nov 2026 - 12:59 pm

2 mins read

லிட்டில் இந்தியாவில் உள்ள கடைவீடு ஒன்றில் வியாழக்கிழமை (நவம்பர் 26) காலை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ஏறத்தாழ 25 பேர் வெளியேற்றப்பட்டனர்.

காலை 7.55 மணியளவில் சந்தர் ரோட்டில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, கடைவீடு ஒன்றின் கூரையில் எரிந்த தீ, அருகிலுள்ள கடைவீட்டுக்கும் பரவிக்கொண்டிருந்தது. தீயணைப்பாளர்கள் இரண்டு மணி நேரத்திற்குள் தீயை அணைத்தனர்.

தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன்பே அருகிலுள்ள ஏறத்தாழ 25 பேர் வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

காலை 7.30 மணியளவில் தம் நண்பர் அழைத்துத் தமது ‘சேலம் ஆர்ஆர் பிரியாணி’ உணவகத்தில் தீப்பிடித்ததாகக் கூறியதாக திரு சிவகுமார், 46, தெரிவித்தார்.

செங்காங்கிலிருந்து விரைந்து வந்த அவர், உணவகத்தைக் கரும்புகை சூழ்ந்திருப்பதைக் கண்டார். ஐந்து மாதங்களுக்கு முன்புதான் கடையைத் திறந்ததாகவும் தடுப்புக்கு வெளியே நின்று தாம் காத்திருந்ததைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் வருந்தினார்.

காலை 7.45 மணியளவில் கரும்புகையைக் கண்ட டாமி இயோ, மற்றொரு கடை ஊழியரிடம் குடிமைத் தற்காப்புப் படையை அழைக்கச் சொல்லிவிட்டு அருகிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

காலை 8.20 மணியளவில் அருகிலுள்ள ஃபூச்சோ மெதடிஸ்ட் தேவாலயத்தில் பிள்ளைகளை இறக்கிவிட வந்த திரு பெஞ்சமின் சியாங், காற்றில் புகை வாடையை உணர்ந்தார். இரு தீயணைப்பு வாகனங்களையும் நான்கு காவல்துறைக் கார்களையும் கண்ட அவர், தம் பிள்ளைகள் புகையைச் சுவாசிக்கக்கூடும் எனக் கவலைப்பட்டார்.

காலை 11.25 மணி நிலவரப்படி, அப்பகுதியைச் சுற்றியிருந்த மக்கள் கலைந்து சென்றுவிட்டனர். தடுப்புகள் அகற்றப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்