பாசிர் ரிசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) காலை தீ மூண்டதை அடுத்து, 20 பேர் அந்த புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட இருவர் புகையைச் சுவாசித்ததன் காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
புளோக் 722 பாசிர் ரிஸ் ஸ்திரீட் 72ல் உள்ள எட்டாவது மாடி வீட்டின் படுக்கையறையில் காலை 7.30 மணியளவில் தீச்சம்பவம் நேர்ந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
நீரைப் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அந்த வீட்டில் இருந்த மூவர் தாங்களாகவே வெளியேறிவிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல்துறை அதிகாரிகளும் குடிமைத் தற்காப்புப் படையினரும் அந்த புளோக்கிலிருந்து 20 குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
மின்சாரக் கோளாற்றால் படுக்கையறையில் தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மின் இணைப்புகளில் அளவுக்கு அதிகமாக மின்சாரச் சாதனங்களைப் பொருத்துவதைத் தவிர்க்குமாறும் பயன்படுத்தாதபோது மின்சாதனங்களை அணைத்து வைக்குமாறும் குடிமைத் தற்காப்புப் படை கேட்டுக்கொண்டது.
சேதமடைந்த மின்கம்பிகளை உடனே மாற்றவேண்டும் என்றும் நீண்ட நேரம் சாதனங்களை மின்னூட்டம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

