பொங்கோலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
புளோக் 19 பொங்கோல் ஃபீல்ட் வாக்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இரவு 7 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை புதன்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியது. இந்த முகவரி, வாட்டர்வுட்ஸ் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமைக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள புளோக்கில் ஒன்றாகும்.
சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் சென்றடைந்தபோது, 16வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வசிப்பறையில் தீ எரிந்துகொண்டிருந்தது.
தீயணைப்புப் படையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர்.
தீயணைப்பு நடவடிக்கையின்போது, அந்த வீட்டிற்குள் இருந்த நான்கு பேரைத் தீயணைப்பாளர்கள் மீட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த நால்வரும் சுயநினைவுடன் இருந்தனர். புகையை உள்வாங்கியதன் காரணமாக ஏற்பட்ட சுவாசப் பிரச்சினைகளுக்காக அவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
பாதுகாப்பு நடவடிக்கையாக, காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் ஏறக்குறைய 100 பேரை அந்த புளோக்கிலிருந்து வெளியேற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.