குவீன்ஸ்டன் குடியிருப்பில் தீ; 25 பேர் வெளியேற்றம், மருத்துவமனையில் இருவர்

குவீன்ஸ்டன் குடியிருப்பில் தீ; 25 பேர் வெளியேற்றம், மருத்துவமனையில் இருவர்

படங்கள்: எரிக் சுவா/ஃபேஸ்புக், ஸின்லின்_68/திரேட்ஸ்

19 Oct 2026 - 9:09 pm

1 mins read

குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 19) பிற்பகலில் நேரிட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஏறத்தாழ 25 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மே லிங் ஸ்திரீட்டில் உள்ள புளாக் 158ல் தீச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பிற்பகல் 12.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீ மூண்ட வீட்டில் இருந்த இருவரைக் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டனர். அவர்களில் ஒருவர் புகையைச் சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அண்டை வீட்டைச் சேர்ந்த மற்றொருவரும் இதே காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பத்தாவது மாடி வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்ததாகவும் பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. குவீன்ஸ்டவுன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் சுவா, நிலைமையை நேரில் ஆராய்வதற்காகத் தமது வேலைத்திட்டங்களை மாற்றியமைத்துக் கொண்டு மாலை 6.10 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

பாதிக்கப்பட்ட வட்டாரத்தின் குடியிருப்பாளர்களுடன் அவர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்
தீவீவகமருத்துவமனை