செம்பவாங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, 46 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீச்சம்பவம் குறித்துச் செவ்வாய்க்கிழமை மாலை 5.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
புளோக் 512 வெல்லிங்டன் சர்க்கிளில் உள்ள பத்தாவது மாடி வீட்டின் படுக்கையறையில் தீ மூண்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை முழுமையாக அணைத்ததாகவும் அது தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட படங்களும் காணொளிகளும் தீ மூண்ட வீட்டின் சன்னல்கள் வழியே கரும்புகை வெளியேறுவதைக் காட்டுகின்றன.
முதற்கட்ட விசாரணையில் அது வேண்டுமென்றே தீ மூட்டப்பட்ட சம்பவம் எனத் தெரியவந்துள்ளதாகக் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புக்குச் சிகிச்சை பெற, அந்த வீட்டிலிருந்த 46 வயதுப் பெண் சுயநினைவோடு சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர், திட்டமிட்டு தீ மூட்டிய குறும்புச்செயல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
விசாரணை தொடர்கிறது.

